ஞானசாரவை அடக்க முஸ்லிம் சமூகம் ஒன்று பட வேண்டும்


பல வருடங்களாக ஞானசாரவை அடக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கையின் முஸ்லிம் இருந்து வருவது ஒரு கோழைத்தனமான வெட்கக்கேடான விடயமாகும். இந்த விடயத்தில் நாம் ஒருவரையொருவர் விமர்ச்சித்துக்கொண்டிருப்பதை. தவிர்த்து இதற்கான நேரடி நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளா விட்டால் நாம் ஒரு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அன்று ஹலால் என்ற ஒரு மமதையைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி விட்டுத் திட்டமிட்டு அலுத்கமையை எரித்தாலும் அந்தப் பிரச்சனை நாடு பூராகவும் பரவாமல் அல்லாஹ் பாதுகாத்தான். ஆனால் இன்றிருக்கும் நிலை இப்படியே தொடருமானால் மியன்மார் முஸ்லிம்களை விடவும் அன்று 83 ஜூலை கலவரத்தின் போது எங்கள் கண் முன்னால் எரிக்கப்பட்ட இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு நிலையை நாம் முன் நோக்கியவர்களாக ஒரு அபாயகரத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த நிலையில் தேர்தல் காலங்களில் இலங்கையின் முஸ்லிம் தலைகளுக்கு பேரம் பேசி அமைச்சுகளையும் சலுகைகளையும் சொகுசுகளையும் மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்புவதில் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை.அன்று மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தங்களின் வசதிகளை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம்கள் விடயத்தில் மௌனமாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக மஹிந்தவுக்கு எதிராக புனிதப் போர் செய்வதாக மாயை காட்டி அரசியல் நாடகத்தை அரங்கேற்றியதன் மூலம் தங்களது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர்.
என்றாலும் பெரும்பான்மையான முஸ்லிம் வாக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் அச்ச மனப்பான்மையோடு வாழ்ந்தாலும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தியொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஞானசாரவையோ அல்லது முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள் சம்பந்தமாக பேசுவதால் தமக்கிருக்கும் சலுகைகளை இழக்கலாம் என்ற அச்சத்தோடு உள்ளனர்.
இந்த இக்கட்டான கால கட்டத்தில் பள்ளிவாசல்கள் மூலமாக முஸ்லிம்கள் ஒன்று கூடுவதன் மூலம் மாத்திரமே எங்களுக்குரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் பள்ளிவாசல்களை கேந்திரப்படுத்துவதன் மூலம் எங்களுக்குள்ள முஸ்லிம் சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும்.எங்கள் சமூகத்தில் மார்க்கம் சம்பந்தமான முரண்பாடுகள் மலிந்து கிடந்தாலும் அவற்றை விட முஸ்லிம்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.
எங்களுக்குள் எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒரே இறைவனை வணங்கக்கூடியவர்களாகவும் ஒரே நபியைப் பின் பற்றக்கூடியவர்களாகவும் இருக்கிறோம். இந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு அநியாயம் கட்டவிழ்த்து விடப்படும் போது தப்லீக் இயக்கத்தினர் என்றோ அல்லது தவ்ஹீத் இயக்கத்தினர் முஸ்லிம் காங்கிரஸ் என்றோ அல்லது மக்கள் காங்கிரஸ் என்றோ பாகுபாடு பாராமல் முஸ்லிம்கள் என்ற அமைப்பிலேயே முகம் கொடுக்க நேரிடும். இந்த அடிப்படையில் ஜும்ஆப் பிரசங்கள் உட்பட இந்தச் சங்கடமான கால கட்டம் சம்பந்தமாக ஆராயப்படுவதுடன் சமூகத்தின் வழி காட்டிகளாக உலமாக்கள் இவற்றுக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.