அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் மத்திய அரசு மற்றும் மாகாணசபைகளுக்கு இடையிலேயே முரண்பாடுகள் எழுந்துள்ளன.
தீர்வுகள் தொடர்பில் ஆழமாக கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியல் அமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை தொடர்பில் பிரதான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பிலான மாநாடு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் மிகவும் முக்கியமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் முயற்சியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையின் நீண்டகால பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் நாம் சிறந்ததொரு தீர்வை முன்வைக்கும் நோக்கத்திலேயே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக தென்னாபிரிக்கா போன்று ஒரு தீர்வு பெறப்பட வேண்டியது அவசியமாகும்.
அதற்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நாம் பெற்று மாற்றம் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றோம். தீர்வுகள் தொடர்பில் நகர்வுகளை மேற்கொள்ள நாம் முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றி குழுக்களை நியமித்து மக்களின் கருத்துக்களை பெற்று வருகின்றோம்.
இரண்டு பிரிவுகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து மக்களை கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கருத்துக்கள் பெறப்பட்டதுடன் வழிநடத்தல் குழு பிரதான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து வருகின்றது.
குறிப்பாக சகல அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆராயப்பட்டு முரண்பாடுகளுக்கு அப்பால் ஓர் ஒருமைப்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும். பிரதானமாக மக்களின் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிய, மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பின் மூலமே இந்த நாடு ஆளப்பட வேண்டும்.
அதற்கான நகர்வுகளை மேற்கொண்டு நாட்டின் சகல பகுதிகளிலும் சகல மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கையினை உபகுழுக்கள் தயாரித்துள்ளன.
மக்கள் முரண்படும் நிலையில் எம்மால் தீர்வு ஒன்றை நோக்கி பயணிக்க இயலாது. பெரும்பான்மை மக்களின் கருத்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் கருத்துக்கள் என தனித்து பார்க்காது இலங்கையர்களின் கருத்துக்கள் என்ற அடிப்படியில் கருத்தில் கொள்ள வேண்டும்.
வழிநடத்தல் குழுவின் மூலம் அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த போதிலும் ஒருசில காரணிகள் காரணமாக எம்மால் இந்த விடயத்தை மேற்கொள்ள முடியாது போயுள்ளது.
எனினும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இடைக்கால அறிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் பிரதான இரண்டு கட்சிகள் இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதேபோல் ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்த விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டையும் எம்மால் எட்ட முடிந்துள்ளது.
அதிகாரப் பரவலாக்கல் என்பது மிகவும் அவசியப்படும் ஒரு காரணியாகும்.
ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. அதேபோல் பெளத்த மதம் ஒருபோதும் பின்வாங்கப்பட போவதில்லை. அதேபோல் ஏனைய மதங்களும் சம உரிமையில் பாதுகாக்கப்படும். அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் முரண்பாடுகள் உள்ளன. கட்சி ரீதியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன.
மாகாண சபை அதிகாரங்கள் உரிய மட்டத்தில் பகிரப்பட வேண்டும். ஆரம்பத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்த போதிலும் இன்று கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். எனினும் இன்று அதிகார பரவலாக்கல் தொடர்பில் மாகாணசபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
13 ஆம் திருத்தத்தை கொண்டுவருவதில் மாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்றன.
எனினும், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாணசபை இடையிலான முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் கொண்டுவந்து இந்த ஆண்டுடன் 31 ஆண்டுகள் ஆகின்றன. எனினும் தீர்வுகள் தொடர்பில் இன்னும் முரண்பாடுகள் எழுந்தவண்ணமே உள்ளன.
அடுத்த ஆண்டு நிறைவுக்குள் இந்த பிரச்சினைகளை சுமுகமாக பெறக்கூடிய வகையிலான ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். ஆகவே இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் எவ்வாறு தீர்ப்பது என்ற பொது இணக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டும்.
அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் வெஸ்ட்மிஸ்டர் முறைமை ஒன்றை நோக்கிப் பயணிக்கவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். நியூசிலாந்து முறைமை போன்றதொரு முறைமையும் ஆராயப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை முழுமையாக சாதகமான தன்மைகளை கொண்டுள்ளது என கூற முடியாது. முரண்பாடுகளும் உள்ளன. அனைவரும் இணைக்கம் தெரிவிக்காத சில விடயப்பரப்புகள் உள்ளன.
எனினும் பொது இணைக்கப்பாட்டு கருத்து ஒருமிப்பு ஒன்றை பெற்றுக் கொள்வதே இப்போது அவசியமான ஒன்றாகும். இந்த சந்தர்ப்பம் எமக்கு மிகவும் முக்கியமான கட்டமாகும்.
அனைவரும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரும் நல்ல வாய்ப்பு உள்ளது. அதை நோக்கியே நாமும் பயணித்து வருகின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.
