கொஹுவலை பொலிஸார் தீவிர விசாரணை

மேல் மாகாண சபையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் கொழும்பை அண்மித்த, கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் உள்ள 19 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அந்த இல்லத்தின் காப்பாளரான பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவரை கைது செய்ததாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக, அந்த அதிகார சபை கொஹுவலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் சிறுமியர் உடை மாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் சி.சி.ரீ.வி. கமராவினூடாக எடுக்கப்பட்ட படங்கள் பதிவானதாக நம்பப்படும் உபகரணத்தினையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு வேளைகளில் குறித்த சிறுமியர் சந்தேகநபரால் ஸ்பரிசம் ரீதியில் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொஹுவலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியசாந்த தலைமையிலான பொலிஸ் குழுவே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கொஹுவலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியசாந்த தலைமையிலான பொலிஸ் குழுவே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த இல்லத்தில் தங்கியிருந்த 10 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட 19 சிறுமிகளை நேற்று கொஹுவலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பிரகாரம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அதன் பின்னர் சிறுமியர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைவாக 62 வயதுடைய குறித்த சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் இல்ல சிறுமிகளிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களைத் தொடர்ந்து அந்த சிறுவர் இல்லத்தையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இரு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் மேல் மாடியில், உறங்குவதற்கான வசதிகளைக் கொண்ட பூரண அறைகள் இருந்த போதும் அவை ஒருபோதும் குறித்த சிறுமியருக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த சிறுமியருக்கு சரியான முறையில் உணவு, பானங்கள் கூட அங்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இரவு வேளையில் கீழ் மாடியில் உள்ள இரு அறைகளில் தங்கவைக்கப்படும் குறித்த சிறுமியர், சந்தேக நபரால் அவ்வப்போது ஒவ்வொருவராக அழைத்து ஸ்பரிசம் ஊடான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறுமியரின் வாக்குமூலங்கள் ஊடாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந் நிலையிலேயே உடை மாற்றும் அறையில் இருந்து சி.சி.ரீ.வி. கமராப் பதிவுகள் தொடர்பிலான உபகரணமும் கிடைத்துள்ளது.
குறித்த சிறுமியர் சர்வதேசப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் நிலையில், அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று அழைத்து வரும் வாகனத்தின் சாரதியாகவும் குறித்த சந்தேகநபரே செயற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இரு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடும் பொலிஸார் அவரது இரு பிள்ளைகளும் வெளிநாடொன்றில் வசிப்பதாக சுட்டிக்காட்டினர்.
இந் நிலையில், இந்த துஷ்பிரயோக சம்பவத்துக்கு சிறுவர் இல்ல காப்பாளரான பெண்ணின் தொடர்புகள் ஏதும் உள்ளதா எனவும், சிறுமியர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் உறுதி செய்ய மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்