பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநியாயங்கள், அடாவடித்தனங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது எனவும் அப்பாவி பலஸ்தீன மக்களின் உயிர்களை மோசமான முறையில் காவுகொள்ளும் இஸ்ரேலின் ஈனச்செயலை எவராலும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இன்று நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும் ஜும்ஆ பிரசங்கத்தின்போது பலஸ்தீன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு வேண்டியுள்ளது.
இன்றைய ஜும்ஆ தொழுகையின் போது பலஸ்தீன மக்களின் பாதுகாப்புக்கும் நலன்களுக்குமாக விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எம்.எம்.ஏ. முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களின் 3 ஆவது புனித வணக்கஸ்தலமான பைத்துல் முக்கத்தஸ் அமைந்துள்ள பூமியைச் சூழவுள்ள பகுதிகளில் இஸ்ரேலியர்களால் அரங்கேற்றப்படும் வன்செயல்களை சகல முஸ்லிம்களும் கண்டிக்க வேண்டும்.
அப்பாவி பலஸ்தீன மக்களின் பாதுகாப்புக்காக வேண்டி முஸ்லிம் நாடுகள் சர்வதேசத்திடம் வேண்டுகோள்விடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
