ஏ.எல்.எம். சத்தார்
டெங்கு நோய் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீண்ட கை, காற் சட்டைகளை அணியுமாறு கல்வியமைச்சர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனையை தனது பாடசாலையில் அனுமதிக்கப் போவதில்லையென்று கொழும்பு விசாகா வித்தியாலய அதிபர் கூறியுள்ளார்.
மேற்படி நீளமான கால்சட்டை முஸ்லிம் மாணவிகளின் சீருடையை ஒத்திருப்பதாலேயே தன்னால் மேற்படி சீருடைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புக் கடியிலிருந்து மாணவ, மாணவிகளைத் தற்காத்துக் கொள்வதற்காக நீளமான கை, காற்சட்டை சீருடையை அணியும் ஆலோசனை ஒன்றை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்திருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே விசாகா வித்தியாலய அதிபர் தனது பாடசாலை கூட்டம் ஒன்றில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து சிங்கள ஊடகம் ஒன்று மேற்படி அதிபரிடம் கேள்வி எழுப்பியபோது முஸ்லிம் பிள்ளைகளின் சீருடையை போன்று அணிவதை தமது பாடசாலையில் அங்கீகரிக்க முடியாதென்றும் இதற்குப் பிரதியீடாக பாடசாலைக்குள் மாத்திரம் வழமையான சீருடையுடன் அதற்குக் கீழ் பகுதியில் பாடசாலைப் பிள்ளைகள் அணியும் டையின் நிறத்தில் நீளமான காற்சட்டையை அணிய தம் பாடசாலை மாணவிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அத்தகைய மேலதிக காற்சட்டையை பாடசாலைக்கு வெளியே அணிய வேண்டாம் என்றும் தான் ஆலோசனை வழங்கியதாக குறித்த அதிபர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்