கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச்செல்வதால் அதனை மீட்கும் போராட்டத்தில் இணையுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்ப்பதில் உறுதியாக உள்ளன. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் தமிழர்களாகிய நாங்கள் வேறுபாடின்றி ஒற்றுமைப்பட வேண்டும். குறிப்பாக வருகின்ற கிழக்கு மாகாண தேர்தலில் தேசியம் என்று பேசி ஏமாற்றுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு பொய் ஆட்சியும் அடாவடி ஆட்சியும் நடத்தும் இந்த அரசாங்கத்தின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. இந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கிலே இருவரும், மட்டக்களப்பில் ஆற்று மணல் ஏற்றிய ஒரு இளைஞனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் வரலாற்றில் ஒருகறைபடிந்த நாள் 1983 யூலை இன்றைய தினமாகும்.
அன்றைய ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தி மூவாயிரம் அப்பாவி தமிழ்மக்களை படுகொலை செய்த நாள் இதுவாகும்.
தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமும் இதை மீண்டும் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் வடகிழக்கில் ஏற்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. அரசுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றது.
இன்றைய நாள்தான் கடந்த 1983 ஆம் ஆண்டு பல இளைஞர்களின் தலைவிதியை மாற்றியமைத்த நாள். நானும் அதற்கு விதி விலக்கல்ல. பல கற்பனைகளுடன் கல்வியும் வீடும் என்றிருந்த எங்களை புத்தகங்களை வீசி எறிந்து விட்டு அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தச்செய்த நாள்.
அன்றிருந்த இளைஞர்கள் இயக்க வேறுபாடின்றி தமிழ் மக்களுக்கு ஆயுதப் போராட்டம்தான் விடிவைத் தரும் என்று நம்பிப் புறப்பட்டார்கள்.பின்பு பல இழப்புக்கள், சூழ்ச்சிகள், தலைமைப் போட்டிகள், சகோதரப் படுகொலைகள் என்றெல்லாம் எமது போராட்டம் சிக்குண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவிற்கு வந்து நிற்கின்றது.
வேட்டி கேட்டுப்போய் கோவணமும் இல்லாமல் வந்த கதையாகவே தமிழர்களின் தலை விதி மாறியுள்ளது. இன்றும் போட்டியும் பொறாமையும் பிரதேச வாதமும் தமிழ் தலமைகளிடம் மாறவில்லை. அதேபோல், கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அத்துடன், வடக்கில் தலைமைப் போட்டிகள் என தமிழ் சமூகம் சிக்கித் தவிக்கின்றது.
இதிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்க வேண்டுமானால் பழமைவாத சுயநல அரசியல்வாதிகளை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புதுமையான அரசியல் தலமைகளை எமது இளைஞர் சமூகம் உருவாக்க வேண்டும்.
இன்னும் சம்பந்தர், மாவை போன்ற சுயநல அரசியல்வாதிகளுக்குப் பின்னால் சென்றால் எஞ்சி இருக்கும் எமது தமிழினத்தை நாம் அகராதியில்தான் தேடிப் பார்க்க வேண்டிவரும்.
அவர்களும் தீர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிக் கூறி இந்த காட்டுமிராண்டி அரசுடன் துணை போய்க்கொண்டு சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்ப்பதில் உறுதியாக உள்ளார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் தமிழர்களாகிய நாங்கள் வேறுபாடின்றி ஒற்றுமைப்பட வேண்டும்.
குறிப்பாக வருகின்ற கிழக்கு மாகாண தேர்தலில் தேசியம் என்று பேசி ஏமாற்றுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தூக்கி எறிந்து விட்டு ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்வரவேண்டும். இதற்கான பாதையை நாம் வடிவமைத்துள்ளோம். தனியொரு மாற்று தமிழ் சக்தியாக தனித்து போட்டியிடவுள்ளோம். இதில் வேறுபாடில்லாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களை எங்களின் பின்னால் அணிதிரளும்படி அன்பாக வேண்டிக்கோள்கின்றேன்.
இது வெறும் பதவிக்கோ புகழுக்கான போராட்டம் அல்ல தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி பணிவாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

0 கருத்துகள்