தேசிய அரசாங்கத்தின் காலக்கெடு நிறைவடைந்துள்ளதனால் நாட்டில் தற்போது சட்டபூர்வமற்ற அமைச்சரவையே உள்ளது. ஆகவே சட்டபூர்வமற்ற அமைச்சர்களின் பணிப்புரைகளை அதிகாரிகள் அமுல்படுத்துவதனால் அவர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரலாம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஸா தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகை யில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாடு தற்போது பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறுவதற்கு எவரும் இல்லை. அரசாங்கம் சிறந்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறித்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. எனினும் அது நாட்டில் ஸ்திர மற்ற அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியின் போது 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறையில் இளைஞர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த விதிமுறையை நல்லாட்சி அரசாங்கம் நீக்கி பெண் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியது. ஆயினும் தேர்தலின் பின்னர் பெண் பிரதிநிதித்துவத்திலும் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வை எதிர்வரும் மார்ச் மாதம் இருபதாம் திகதி வரையில் காலம் தாழ்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தேர் தல் முடிவடைந்து ஒரு மாதமும் 10 நாட்களும் கடக்கும் வரையில் உள்ளூராட்சி மன்றங்களை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் தேர்தல் முடிந்த பின்னர் தெரிவாகிய உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யாது நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் இம்முறைதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகும் உறுப்பினர்கள் ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு கொடுப்பனவும் பெறாது பணியாற்ற வேண்டும் எனவும் அரசாங்கம் தற்போது கேட்டுக்கொள்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதானமாக கொண்ட கூட்டு எதிர்க்கட்சியை தோற்கடிப்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை நடத்தாது நீண்ட காலம் இழுத்தடிப்புச் செய்தது. எனினும் அரசாங்கமே தேர்தலில் படுதோல்வியடைந்தது. மேலும் வடமத்திய , சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்தை கூட வர்த்தமானியில் வெளியிட முடியாத நிலைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தொகுதிவாரியாக ஐம்பது சதவீதமும், விகிதாசாரம் ஐம்பது சதவீதமுமாக மாகாண சபைத் தேர் தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் ஒரு மாகாண சபையைகூட நிலையாக முன்னெடுக்க முடியாது போகும். ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறையில் தேர்தலை நடத்தாது எழுபதுக்கு முப்பது என்ற அடிப் படையிலாவது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
