புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி குறித்த அறிக்கை தொடர்பில் கலந்தாலோசனை செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீண்டும் கூடி நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அடுத்த வழிநடத்தல் குழுவுக்கான திகதி குறிப்பிடப்படவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல்குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணி சார்பாக தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சித் தலைவர்களின் பிரதிநிதித்துவத்துடன கூடிய வழிநடத்தல்குழு நிறுவப்பட்டது.
இந்த வழிநடத்தல்குழு பல தடவை கூடியதுடன் இதன் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் தடைப்பட்டாலும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழிநடத்தல் குழுவினால் அரசியலைப்புக்கான வரைபினை தயாரிப்புக்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர்குழுவின் அறிக்கை இறுதியாக நடந்த வழிநடத்தல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அந்த அறிக்கைக்கு நிபுணர்குழு மத்தியிலும் வழிநடத்தல் குழுவிலும் இணக்கபாடில்லாத நிலைமை ஏற்பட்டது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் அனைவரின் இணக்கத்துடன் பூரண அறிக்கையொன்றை முன்வைக்குமாறு நிபுணர்கள் குழுவுக்கு வழிநடத்தல்குழு ஆலோசனை முன்வைத்தது.
இதன்படி நேற்றைய தினம் வழிநடத்தல்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மீண்டும் கூடியது. இதன்போது நிபுணர் குழுவின் பூரண அறிக்கை வழிடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த அறிக்கை தொடர்பில் கலந்தாலோசனை செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீண்டும் கூடி நிபுணர் குழுவின் அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பதா? அல்லது கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சமர்ப்பிப்பதா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. வழிநடத்தல் குழுவுக்கான அடுத்த கூட்டத்திற்கான திகதி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்