தேர்தல் காலங்களில் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டதாகவும் அதனை தாம் நிரூபிக்கத் தயாராக உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் 11 மாகாண சபை உறுப்பினர்களுக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இது கட்சியின் நிர்வாக செலவுக்காக வழங்கப்பட்டதா அல்லது பிரசாரத்துக்காக வழங்கப்பட்டதா என்பது வழங்கியவருக்குதான் தெரியும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பகிரங்கமாகவே சொல்கிறேன் பணம் வழங்கியது உண்மை. முடிந்தால் வழக்கு போடுங்கள். இன்னும் பல விடயங்கள் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது அதனை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என தெரிவித்த அவர், ஒட்டுக்குழுக்கள் என்று ரெலோவையும் புளொட்டையும் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் அவர்களுடைய வாக்குகளையும் சேர்த்துத்தான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார் என்பதை அவர் உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
என்னைப்பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகர சபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஐயாவை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.
நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும். நகர சபைத் தவிசாளரை தேர்ந்தெடுப்பதிலே அதிருப்தியுற்று சதீஸ் அந்தக் கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தார். ஆனால் சதீஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாரென்று சுமந்திரன் கூறுகின்றார். கூட்டத்தை பகிஷ்கரித்திருந்த சதீஸ் எவ்வாறு தவிசாளராக போட்டியிட்டிருப்பார்.
ஊடகப் பேச்சாளர் என்று கூறிக் கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றி சுமந்திரன் பேசக்கூடாது. தெரியாத விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் ஏன் சதீஷினுடைய உறுப்புரிமை பறிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி சட்டத்தரணியால் முடியாமல் போய்விட்டதா? உங்களுடைய கனிஷ்ட சட்டத்தரணிகள் சரியாக செய்யவில்லை என்றால் அதனை செய்விக்க வேண்டியது யார்? இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இந்த வழக்கில் ஐந்து தடவைக்கு மேல் சுமந்திரன் முன்னிலையாகி 42 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அனுப்பியதாக சுமந்திரன் கூறும் கடிதத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு எழுதிய கடிதம் என்பது வல்வெட்டித்துறை நகர சபை வரவு செலவு திட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றியதாகும். அதில் நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை. நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் இல்லை, ரெலோவிலும் இல்லை.
நான் குருநாகலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதி வேட்பாளராக குருநாகலில் போட்டியிட்டபோது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருந்தேன். அதற்கு ஆதாரமாக வீக்கிலீக்ஸ் வெளியிட்ட பதிவுகள் இருக்கின்றன.
இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தி குறிப்பில் சர்வதேச விசாரணையை கோரும் ஒரே ஒரு தமிழன் சிவாஜிலிங்கம்தான் என கூறியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்