பா. நஸீறா ஜமால்தீன்
4 ஆம் வருடம்
சமூகவியல் விஷேட துறை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
4 ஆம் வருடம்
சமூகவியல் விஷேட துறை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
அரச கொள்கை உருவாக்கத்திலும் உயர் நிர்வாகப் பொறுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பு பெயரளவிலேயே காணப்படுகின்றது. ஆணாதிக்க சிந்தனை வளர்ச்சியடைந்துள்ள எமது நாட்டில் பெண்களின் வாழ்வியலானது பெரும் போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. கல்வியில் சாதனை படைத்துள்ள பெண்கள் தனது உரிமையை பெறுவதில் கவனயீனத்துடன் நடந்து கொள்கின்றனர். உண்ணுவதும் உறங்குவதும் விரும்பிய இடத்திற்கு செல்வதும் பிடித்த ஆடையை அணிவது மாத்திரம் பெண்ணுரிமையல்ல. மாறாக, அரசு விதிக்கும் ஒவ்வொரு சட்டத்தினையும் சலுகைகளையும் அனுபவிப்பதற்கான உரிமையை வேண்டிநிற்க வேண்டும். உரிமை எனும்போது என் உணர்வுகளில் உதிப்பது பெண்கள் அரசியலில் எந்தளவு உரிமையை பெறுகின்றார்கள் என்பதேயாகும்.
அரசியல் என்பது அதிகாரம் நிறைந்த விளையாட்டாகவே நோக்கப்படுகின்றது. இப்பொதுவான எண்ணமானது பெண்கள் அரசியல்சார் விடயங்களில் பங்கேற்கும் நடத்தை கோலத்தினை பெருமளவு தீர்மானிக்கின்றது. இயற்கையின் படைப்பால் ஆணும் பெண்ணும் சமமான தரத்தினை கொண்டிருப்பினும் மூன்றாம் மண்டல நாடுகளில் பால்நிலை சமத்துவம் என்பது பாரிய வேறுபாடுகளுடன் நோக்கப்படுகின்றமை துரதிஷ்டமான விடயமாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் இன, மத, கலாசார மற்றும் சமூக விடயங்களில் இப்பால்நிலை சமத்துவமென்பது வேறுபட்டே நோக்கப்படுகின்றது (Sirima Kiribamune & Vidyamali Samarasinghe-1990) இலங்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஆண் உறுப்பினர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். அரசியல் பங்குபற்றல் என்பது ஜனநாயக நாடுகளில் ஜனநாயகத் தன்மையின் கருவாக எடுத்துக்காட்டப்படுகின்ற போது ஆண்கள் கூடுதலான உரிமையையும் பெண்கள் குறைவான உரிமையினையும் அனுபவிப்பது உண்மையான ஜனநாயகத் தன்மையல்ல. மாறாக இரு பாலினமும் சம அந்தஸ்தினை பெறுவதே ஜனநாயகத் தன்மையாகும்.
ஐ.நா. பொதுச்சபையினால் 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீதான பிரகடனத்தின்படி, ((universal declaration of human rights) உறுப்புரை 7இல் சட்டத்தின்முன் அனைவரும் சமம். அத்துடன் எந்தவொரு பாரபட்சமுமின்றி சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு அனைவரும் உரித்துடையவர்கள். இவ்வாசகமானது குடியியல், அரசியல் உரிமை மீதான சர்வதேச பொருத்தத்தினை எடுத்துக்காட்டுகிறது. இதில் பெண்ணானவள் தகுதியற்றவள் என்று வேறுபடுத்திக்காட்டவில்லை.
1979ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் (Vention on elimination of discrinimination against woman) சேர்த்துக் கொள்ள கையொப்பமிட முன்வைக்கப்பட்ட போது 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வலுவிழந்தது. ஆனால் இலங்கை அரசானது 1981ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி பின்னுறுதிப்படுத்தியது. இவ்வாறான சாசனங்களானது அரசியல் உரிமை என்பது மனிதன் அனுபவிக்கும் முதலாவது உரிமை எனவும் அதனை அனுபவிக்க பெண் என்பவள் முழுமையான தகுதியுடையவள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
இலங்கையை பொறுத்தவரை பெண்களின் சனத்தொகையானது 51.86 வீதம் காணப்படுகின்றது (Gender statistic- 2016). 2015இல் தெரிவான பெண் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையானது 2010இல் தெரிவான 13 என்ற எண்ணிக்கையினையே பிரதிபலிக்கின்றதே தவிர இவற்றில் அதிகரிப்பு ஏற்படவில்லை. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 13 பெண் உறுப்பினர்களே உள்ளமை இலங்கையில் பெண் அரசியல் பங்குபற்றலின் ஆர்வமின்மையை எடுத்துக்காட்டுகிறது (Hand book of parliament -2017). இதனடிப்படையில் பார்க்கும் போது மொத்த பிரதிநிதிகளின் விகிதாசார அடிப்படையில் பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரமானது 6வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.
2014ஆம் ஆண்டினது இலங்கை தேசிய மானிட அபிவிருத்தியின் அறிக்கைப்படி (NHDR), பாராளுமன்ற பெண் பிரதிநிதித்துவம் 2015ஆம் ஆண்டு 5.8வீதமாகக் காணப்பட்டது என தெரிவித்தது. நேபாளத்தில் 33.2வீதம், பங்களாதேசில் 19.7வீதம் மற்றும் இந்தியாவில் 10.9வீதம் பெண் பிரதிநிதித்துவமானது மத்திய அரசில் காணப்படுகின்ற போதிலும் இலங்கையிலேயே மிகக் குறைவான பெண் அரசியல்வாதிகள் காணப்படுகின்றமை சர்வதேச ரீதியில் கேள்விகள் பலவற்றை எழுப்புகின்றன.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் 1931ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடாக இலங்கை காணப்படுகின்றது. மகளிர் அமைப்பை சேர்ந்த சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன் கூறுகையில் “ இலங்கையில் நடைமுறை அரசியலில் காணப்படும் பெண் எதிர்ப்பு மனோபாவமும் ஆணாதிக்க சிந்தனை மற்றும் அணுகுமுறை போன்றவற்றால் விளையும் கசப்பான அனுபவங்களினாலே தனது பார்வையில் பெண்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்கிறார்கள். பெண்ணியல் வாதிகளின் கருத்துப்படி, நடைமுறையில் காணப்படும் வன்முறை போக்கு மதுபான பாவனை போன்ற மோசமான நடைமுறைகள் பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு தடையாக அமைகின்றன.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ உலக தரவரிவையில் இலங்கை 177ஆவது இடத்தில் அமைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்தில் 1.8வீதம் பிரதிநிதித்துவம் தான் இதுவரையில் காணப்படுகின்றது (Parliament union -2016). இந்த நிலமையினை மாற்ற பல தசாப்த காலமாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் என்பன குரல் கொடுத்து வந்ததற்கு பலனாக 2010ஆம் ஆண்டு 16ஆம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் பெண்களுக்கு 25வீதம் இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது (Parliament union -2016) . 2018 பெப்ரவரி 10இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே இம்முறை செயற்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருந்தனர். அதற்காக 56000 அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கையில் மொத்தமாக 17000 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2011இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 100க்கும் குறைவானவர்களே உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இம்முறை தேர்தலில் உள்ளூராட்சி அமர்வில் கட்டாயம் 25வீதம் பெண் பிரதிநிதிகள் அமர்த்தப்பட வேண்டுமெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதில் பெண்கள் உண்மையிலேயே பிரதிநிதிகளாயினரா? இது நடைமுறைச் சாத்தியமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
57 ஆண்டுகளிற்கு முன்பு இலங்கையில், ஏன் உலகிலேயே முதலாவது பெண் பிரதமராக சிறிமா பண்டாரநாயக தெரிவு செய்யப்பட்டார். பின்பு அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்பு பிரபல்யமான வகையில் பெண் பிரதிநிதித்துவம் நலிவடையத் தொடங்கியது. பின்பு பேசத்தகும் வகையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் றோசி சேனாநாயக இலங்கை தலைநகரான கொழும்பு மாநகர தேர்தலில் போட்டியிட்டு மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையாகும். இவரே இலங்கையின் முதலாவது பெண் மேயராகவும் காணப்படுகின்றார்.
பொதுவாக பெண்களின் அரசியல் பங்குபற்றலானது மறைமுக, நேரடி பங்குபெற்றல் என்ற இரண்டு வகைகளில் காணப்படுகின்றன. அதாவது, நேரடி பங்குபற்றலானது, தேர்தலின் போது மட்டும் அரசியல் விடயங்களை வீட்டிலிருந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தல், குடும்பத்தினருடைய சார்பு கட்சிகளுக்கு தனது விருப்பினை வழங்க பழக்கப்படுதல், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தல், தேர்தலின் போது சாதகமான மனப்பாங்கினை ஒரு கட்சியின் மேல் கொண்டிருத்தல், சிறு கூட்டங்கள் நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், தனது அயல் வீடுகளில் உள்ளவர்களை ஒன்று திரட்டி கூட்டங்களிற்கு அழைத்தல், வீடுகளில் பெண்களுக்கான கூட்டங்களினை நடாத்த அதற்கு ஏற்ற வசதிகளை தேர்தல் காலங்களில் உதவிகளை கட்சிகளுக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக பெண்கள் அரசியலில் மறைமுகமாக பங்களிப்பு செலுத்துகின்றனர் என்று எடுத்துக்காட்டலாம். அனைத்து சமூகத்தினை சேர்ந்த பெண்களின் மத்தியில் இதுபோன்ற செயற்பாடானது சாதாரணமாக காணப்படுகின்றதே தவிர மாறாக இவற்றில் எவ்வித நலிவுகளையும் வீழ்ச்சிகளையும் காணமுடியாதுள்ளது.
நேரடியான அரசியல் பங்குபற்றலானது பெண்களைவிட ஆண்களிடமே அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றாமைக்கான காரணங்களாக சமூக, பொருளாதார, சமய, உளவியல் விடயங்களினை எடுத்துக்காட்ட முடியும். சில பெண்களுக்கு ஆர்வமிருந்தும் பொருளாதார வசதி இல்லாமையாலும், அரசியல் பின்னணியுடைய பரம்பரை இல்லாமை, தேர்தலில் போட்டியிட நாடியும் செல்வாக்கு இல்லாமலும் வாய்ப்புகள் நழுவவிடப்படுகின்றன. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண்களைத்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இங்ஙனம் பெண்களுக்கு அரசியலில் வெறுப்புணர்வு உதயமாகின்றது. இவ்வாறான விடயங்களிற்கு தீர்வினை காணும்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பினை மெருகூட்ட இலகுவாக அமையும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற புதிய சட்டமூலங்களால் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் கட்டாய பிரதிநிதித்துவத்தினை வலியுறுத்தினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. வெறுமனே சட்டம் கொண்டு வந்தாலும் அதை நிலைநாட்டுவதிலேயே உண்மையான வெற்றி தங்கியுள்ளது. பெண்களுக்கு தேர்தலின் முக்கியத்துவம், பங்குபற்றுவதிலுள்ள அவர்களது உரிமைகளை எடுத்துக்காட்டும் வகையில் விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டியுள்ளது. அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்ற கருத்தினை விட்டு பெண்களுக்கும் சம உரிமையுள்ளது என்று தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மதத்தினை பிரதிபலிக்கும் கட்சிகளில் மாத்திரம் வாய்ப்பு வழங்காமல் ஏனைய கட்சிகளிலும் சமவாய்ப்பினை வழங்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறான தேவைகளை நிறைவேற்றும் போது எந்தவொரு பிரதேசத்தினை சேர்ந்த பெண்களது அரசியல் பங்குபற்றலினை மெருகூட்டுவதற்கு வாய்ப்பாக அமையும்.
பெண்களின் அரசியல் செல்வாக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதில் சச்சரவு சதுரவடிவிலே காணப்படுகின்றது. ஏனெனில், அரசியல் மோசமான படுகுழி என்று கருதப்படுவதால் அதிலிருந்து அதிகமானோர் விலகிச் செல்லவே முயல்கின்றனர். இந்நிலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த படித்த பெண்களின் திறமை அவசியப்படுகின்றது. போரில் நாட்டை காக்க பெண் ஆயுதம் ஏந்துகிறாள். ஆனால் அரசியல் உலகில் போராடுவதற்கு தேவை என்ன உள்ளது? என்ற சொல்லாடலானது பாலுணர்வைக் கொண்ட ஆண் கொள்கையாளர்களிடையே காணப்படுகின்றது. அகப்பை ஏந்தும் கைகளால் அரசையும் ஆள முடியும் என நிரூபித்துக்காட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய யுவதிகளிடமே உள்ளது. ஏனைய துறைகளில் சாதிக்கத் தெரிந்த பெண்களுக்கு அரசியலில் சாதிக்க முடியாதா? பேனா பிடித்த கரங்களால் கொள்கைகளை உருவாக்க முடியாதா? பயத்தை துறந்து பாதாளம் வரை செல்ல வேண்டுமென்றாலும் முடியும் என்ற உணர்வினை பெண்கள் மத்தியில் வலுப்பெறச் செய்ய வேண்டும். உண்மையினை உணரச்செய்து அடுத்து வரும் தேர்தலிலாவது பெண் பிரதிநிதித்துவத்தினையும் பங்குபற்றலினையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு அனைவர் மத்தியிலும் கடைப்பிடிப்போம்.
-விடிவெள்ளி
-விடிவெள்ளி

0 கருத்துகள்