Headlines
Loading...
பொதுபல சேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போருக்கு ஒப்பானது : ஹசன் அலி

பொதுபல சேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போருக்கு ஒப்பானது : ஹசன் அலி

பொதுபல சேனா அமைப்பினர் கண்டியில் நேற்று முன்தினம் நடத்திய மாநாட்டில் வெளிப்படுத்திய தீர்மானங்களில் சில, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தமைக்குச் சமமானதாகும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஷேட அனுமதியுடன் விடுதலை பெற்று வந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான தனது வழக்கமான எதிர்ப்பு நடவடிக்கைகளை எவ்வித இடைஞ்சலும் இன்றி புதிய மெருகுடன் தொடர்ந்து வருவதாகவும், ஹசனலி சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் ஹசனலி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;


நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது மாநாடொன்றைக் கூட்டுவதற்கான அனுமதி ஞானசர தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின் கருப்பொருள் என்ன என்பது வெளிப்படையாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட பின்னணியில், எவ்வித தடையுமின்றி இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிழல் சக்திகளின் அனுசரணையுடனும் ஆசிர்வாதத்துடனும் வழிகாட்டலுடனும் நடந்த இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, சவால் விடுக்கப்பட்ட பின்வரும் விடயங்கள் பற்றி ஜனாதிபதி, நாடாளுமன்றம், அரச நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சியினர், தமிழ் கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.

01. உலமா சபையுடன் அரசாங்கமும், அரச அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

02. இஸ்லாமிய பெயர் தாங்கிக்கொண்டு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு நாமும் எதிர்ப்புத்தான். அதனை பல வழிகளிலும் முஸ்லிம்கள் வெளிப்படுத்தியுமுள்ளார்கள். ஆனாலும் அவர்களைக் கண்ட இடத்தில் நசுக்கி அழித்து விடுங்கள் என கட்டளையிடும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இஸ்லாம் என்பது என்ன, அடிப்படை வாதம் என்பது எது, என்பன பற்றி பகுத்தாய்ந்து தண்டனை வழங்கும் அதிகாரமும் அதன்பின், அவர்களை கூறுபடுத்தி அழித்து விடுவது என்பதும், நமது நாட்டின் சட்டத்தை மீறும் செயல்களாக கொள்ள முடியாதவையா?

03. 1950 ல் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை மட்டும்தான் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என, இவர்கள் கட்டளையிடுவது முறையான செயலா? இன்னொரு மதத்தின் யாப்பு ரீதியான அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதற்க்கு அரசாங்கம் அனுமதிக்கின்றதா?

04. அடிப்படை வாதத்தை உலமா சபை விதைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அரசாங்கம் எவ்வாறு நோக்குகின்றது.

மேற்கூறிய விடயங்கள் எமது சமூகத்தின் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும், வேதனைகளையும் தோற்றுவித்துள்ளன.

ஈமானில் (நம்பிக்கையில்) பாதி நாட்டுப்பற்றாகும் என எமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எமது பிறப்பும் வாழ்வும் இறப்பும் இந்நாட்டில்தான். எனவே நாம் எதற்கும் அச்சப்படப் போவதில்லை.

ஸஹ்ரான் எனும் ஒரு தனிமனிதனால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கைக்காக, ஒரு சமூகத்தையே அடிபணிய வைத்து அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்க முடியாது. ஸஹ்ரானுடன் முஸ்லிம் சமூகம் உடன்பாடு இல்லை என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட்டு கற்றோராலும், மிதவாதப் போக்குள்ள பெரும்பான்மையினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகலரும் அறிந்த விடயமாகும்.

ஆனாலும் ஒரு சில சிறுபான்மையான கடும் போக்கு இனவாதக் கும்பல்; “இல்லை நீங்களும் ஸஹ்ரான் வாதிகள்தான். உங்கள் மீது நாம் திணிக்கவுள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் நிறைவேற்றி முடிக்கும் வரை, உங்களை சஹரானுடன் இணைத்துத்தான் பார்ப்போம்” எனக் கூறிக்கொண்டு எம் மீது தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

அமைச்சுப் பதவிகளை மீளப் பெறுவது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு தயாராகும் முன்னாள் அமைச்சர்கள், மேல் குறிப்பிட்ட விடயங்களுக்கு தெளிவான பதிலை உரியவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களை பதவிகளில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு பிரயோகித்த அழுத்தங்களை விட பலமடங்கு அழுத்தத்துடன், இந்நாட்டில் இனவாதம் வளர்ச்சியடைந்து வருகின்றது.

அதற்கு காரணம் பெரும்பான்மையாக உள்ள நல்ல மிதவாதப் போக்குள்ள நல்ல உள்ளங்கள் கூட பலம் குன்றிப்போயுள்ள நிலைமைதான்.

ஜனாதிபதி, அரசாங்கம், ஆயுதப்படை, அரச அதிகாரிகள் எல்லோரும் அடங்கிப் போயுள்ள ஒரு அமானுஷ்யமான ஆபத்தான அமைதி குடி கொண்டுள்ள இந்த நிலைமையில் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

வீண் வம்புகளை விலக்கி தியானத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்று திரண்டு, எமது அமைதியான செய்தியை சொல்வதற்கு விரைவில் ஒரு மாபெரும் மாநாட்டை கிழக்கில் திரட்ட முன் வருவார்களா?

0 Comments: