Headlines
Loading...
மொட்டின் வெற்றிக்காகவே ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளர்..??

மொட்டின் வெற்றிக்காகவே ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளர்..??

 
ஜனாதிபதி தேர்தல் களம் வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு சூடேற ஆரம்பித்துள்ளது. பெரிய தேசிய கட்சிகள், தங்களது வெற்றியை நோக்கி காய்களை நகர்த்துகின்றன. ஏனைய சிறிய கட்சிகளும், தனி நபர்களும் எங்கு சென்றால், எதைச் செய்தால் சாதிக்க முடியுமோ அவற்றை செய்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க சிந்திப்பதாக ஊர்ஜிதமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இதனை ஒரு புரளியாக கடந்து சென்றாலும், இனியும் அவ்வாறு கடந்து செல்ல முடியாதளவு, அச் செய்தி உறுதியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சார்பாக ஒருவர் களமிறங்க வேண்டும். யாரும் முன்வராவிட்டால், தான் தயாராகவுள்ளேன் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு. இதனை தெளிவாக விளங்கினால் தான், அவரின் இந் நிலைப்பாடு தொடர்பான விமர்சன பார்வைக்குள் நுழைய முடியும்.

ஏன் இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் சிந்திக்கின்றார் எனும் வினாவுக்கு, அவர் ஜனாதியாகத் தான் இவ்வாறு சிந்திக்கின்றார் எனும் பதிலை தவிர்த்து, வேறு வகையில் சிந்தனையை அமைப்பதே பொருத்தமானது. அதிலும் இதற்கான மிகப் பொருத்தமான பதிலை பெற மொட்டுவுடனும், கையுடனும் தொடர்பு படுத்திய சிந்தனைகள் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஹிஸ்புல்லாஹ் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவரின் இந்த அறிவிப்பை அவ்வளவு சாதாரண கோணத்திலும் நோக்க முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வின் தெரிவாக மொட்டு அல்லது கை அமையும் ( தேர்தல் கேட்காமல் இருந்தால் ). இவ்விரண்டில், அவர் தற்போது எப் பக்கம் என்ற வினாவை அவரிடம் கேட்டால், அவரே குழம்பிவிடுவார். ஒரு பிள்ளையிடம் சென்று உம்மாவுடன் சாப்பிடுவதா, வாப்பாவுடன் சாப்பிடுவதா எனக் கேட்டால், என்ன பதில் சொல்லும்..? தனித்து கேட்டால்...? தனித்து கேட்பதாக செய்தியொன்றை பரப்பினால்..? யாருமே ஒன்றும் கேட்க மாட்டார்கள். இது தொடர்பான நிகழ்வுகளுக்கு அழைக்கவுமாட்டார்கள். இலகுவாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளித்து விடலாம். இன்னும் சு.க ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கவில்லை. அமைச்சர் சஜிதோடும் உறவு வைத்துள்ளது. மறுபக்கம் மொட்டையும் நுகர்ந்து பார்க்கின்றது. மொட்டுவோ கோட்டோவை நிறுத்தியுள்ளது. இந்த பூகம்பத்துக்குள் சிக்கி தத்தளிப்பதை தவிர்க்கும் உத்தியாக இதனை ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் பலரின் உள்ளங்களை ஆட்கொண்டுள்ளது.

ஒருவர் ஒரு விடயத்தை சாதிக்க அதனோடு தொடர்புடைய நபர்களை முதலில் தன்னோடு ஒன்றிணைப்பார். இவ்வாறான அனுகுமுறைகளின் மூலமும் ஒருவர் எவ்வாறான சிந்தனையுடன் ஒரு செயலை முன்னெடுக்கின்றார் என்பதை ஓரளவு மட்டிட்டுக்கொள்ள முடியும். அந்த வகையில், இவ்விடயத்தில் ஹிஸ்புல்லாஹ் உளச்சுத்தியோடு செயற்படுபவராக இருந்தால், இலங்கை முஸ்லிம் அரசியலில் அதிக தாக்கம் செலுத்தக் கூடிய மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகளுடன் முதலில் உடன்பாட்டு அணுகுமுறையில் பேசியிருப்பார். ஆனால், அவர் பேசியதோ ஐக்கிய சமாதான கூட்டமைப்போடு. இவர்கள் மொட்டின் மனத்தில் மயங்கியவர்கள். இவர்களோடு ஹிஸ்புல்லாஹ் ஆரம்ப பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் என்றால், அது நிச்சயமாக மொட்டின் வெற்றியை நோக்கிய ஒரு காய் நகர்த்தலாகவே நோக்க முடியும்.

அதில் அப்படி என்னவுள்ளது? ஹிஸ்புல்லாஹ்வுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பினாலும், கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே வாக்களிப்பர். இது மஹிந்த அணியினருக்கு நன்றாகவே தெரியும். அது ஹிஸ்புல்லாஹ் முன்னின்று பிரச்சாரம் செய்தாலும் கூட. இவ்வாறான நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதை அடிப்படையாக கொண்டு காய் நகர்த்துவதை விட, முஸ்லிம்களின் வாக்குகளை வேறு திசை நோக்கி திருப்பினால், அது மொட்டுவின் வெற்றியை சாதகமாக்கும். இதனை கணித வீத முறையில் அறிந்துகொள்ளும் போது, இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். கடந்த முறை ஐ.தே.கவின் வெற்றியில் மிகப் பெரும் பங்களிப்பை செய்தது முஸ்லிம்களின் வாக்குகளேயாகும். அதனை இம்முறை தடுத்தாலே போதுமானதாகும். இரண்டாம் தெரிவு வாக்களிப்பு முறையில் இலங்கை மக்கள் பரீட்சயமற்றவர்கள். அது எந்தளவு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் தாக்கம் செலுத்தும் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது. 

அண்மையில் நடந்தேறிய குண்டு வெடிப்பின் பிறகு ஹிஸ்புல்லாஹ் மீது பெரும்பான்மை சமூகம் ஒருவிதமான சந்தேக பார்வையை கொண்டுள்ளது. இந் நிலையில் அவர் எப் பக்கம் ஆதரவு வழங்குகிறாரோ அப் பக்கமுள்ள பேரின மக்களின் வாக்குகள் குறைவடைய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இம் முறை மஹிந்த அணியினர் பேரின மக்களிடையே வாக்கு சேகரிக்கும் பிரதான பேசி பொருளாக அண்மையில் நடந்தேறிய குண்டு வெடிப்பு காணப்படும். இதனை ஹிஸ்புல்லாஹ்வை அருகாமையில் வைத்துக்கொண்டு பேச முடியாது. அவர் தனித்து கேட்டால்...?

ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்து, பதவி துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரின் வெற்றியை உறுதி செய்ய முடியாது. தனது பலத்தை வெளிப்படுத்தி ஆளுநர் பதவியைப் போன்ற பதவியை பெறும் நோக்கிலும் இவ்வாறானதொரு காய் நகர்த்தலை செய்யலாம். இவ்வாறான விடயங்களை நன்கு ஆராய்கின்ற ஒருவர், இச் செயலினூடாக ஹிஸ்புல்லாஹ் மைத்திரி அணியினரை திருப்தி படுத்துவதையும், மொட்டுவின் வெற்றியை சாதகமாக்குவதையும், தன் சுய பலத்தை நிரூபிக்க முடியுமென்பதையும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறானவைகளை கருத்தில் கொண்டதே ஹிஸ்புல்லாஹ்வின் இச் சிந்தனையென கூறலாம்.

ஹிஸ்புல்லாஹ்வை தேர்தல் கேட்க வேண்டாமென கூற யாருக்கும் உரிமையில்லை. அவர், தனது சுய நலத்தை முன்னிறுத்திய ஒரு செயலுக்கு, முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தியதான சாயம் பூச முற்படுவது நல்லதல்ல.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

0 Comments: