Headlines
Loading...
மனோவின் உளறல்....! மனோ ஒருமைப்பாட்டமைச்சருக்கு தகுதியற்றவர்...!

மனோவின் உளறல்....! மனோ ஒருமைப்பாட்டமைச்சருக்கு தகுதியற்றவர்...!அண்மையில் கொண்டுவரப்பட்ட புர்கா தடை முஸ்லிம்களின் உள்ளத்தை பெருமளவில் வதைத்திருந்தது. இன்றும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் வேறு வழியின்றி, துணிகளால் முகத்தை மறைத்துக்கொண்டு, வெட்கப்பட்டு, அச்சப்பட்டு வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. பலர் வீடுகளிலேயே முடங்கியுமிருந்தனர், முடங்கியுமுள்ளனர். இவ்வாறான நிலையில் அவசர காலசட்ட தளர்த்தலினூடாக புர்கா தடை நீங்கியுள்ளது. இதனை விமர்சிக்கும் பலரை அவதானிக்க முடிகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டிய ஒருவர் தான் மனோ கணேசன் ஆவார். இவர் அடிக்கடி முஸ்லிம்களை சீண்டிப் பார்ப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

மொட்டு அணியின் சாதாரண உறுப்பினர்களில் ஒருவரான பா.உ திலும் அமுணுகம, அரசு முகத்தை மறைப்பதை நீக்கியமை பிழை என கூறியமையை, மொட்டு அணியே கூறியது போன்று ஊடகங்களிலிட்டு விமர்சித்த எமது முஸ்லிம்கள், மனோ கணேசன் கூறியவுடன் நகைச்சுவையாக கடந்து செல்கின்றனர்? எம்மவர்கள் அமைச்சர் மனோவை ஒரு நகைச்சுவையாளனாகத் தான் பார்க்கின்றனரோ!

முதலில் இதனை நீக்கியது தவறென்ற அடிப்படையிலான வார்த்தை பிரயோகம் பாவிப்பதே தவறானது. அதனை யாரும் நீக்கவில்லை. அது தானாக வறிதாகிவிட்டது. இந்த வார்த்தை பிரயோகங்கள் இவர்களிடமிருந்து வருவதானது, இவர்களிடம் சட்ட அறிவு சற்றேனும் இல்லை என்பதை எடுத்துகாட்டுகிறது. இவ் விடயத்தை தெளிவற்றவர்கள் தான் விமர்சிக்கின்றனரோ? 

அமைச்சர் மனோ கணேசனின் கருத்து பா.உ திலும் அமுனுகமவின் கருத்தை விட பலமானது, ஆபத்தானதென்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றேயாக வேண்டும். ஒரு கட்சியின் தலைவரை, எவ்வாறு இலகுவாக மட்டிட இயலும்? இதனை பேரினத்தவர்களே பெரிதாக தூக்கி பிடிப்பது யாவரும் அறிந்ததே! சிறுபான்பை இனக்கட்சிகளும் தூக்கி பிடித்தால், நிலை மிக மோசமானதாக அமைந்துவிடும். இன்னும் இவர் யாரென தெரியுமா? தற்போது அமைக்கப்படவுள்ள ஐ.தே.க கூட்டின்
பிரதான பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் (இன்னும் கூட்டு அமையவில்லை). மேலும், இவர் தேசிய ஒருமைப்பாட்டமைச்சர். இவர் இவ்வாறு கூறி தேசியத்தை பல் கூறாக்கி விடுவார். இந்த அமைச்சை தன்னகத்தே வைத்திருக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது இன்னும் ஆபத்தானது. இக் கருத்தினூடாக மனோ கணேசன் இவ்வமைச்சருக்குரிய தகுதியை இழந்துவிட்டார். 

முகம் மூடுவது இஸ்லாமிய வழிகாட்டலா என்ற சர்ச்சை உள்ள போதும், அதனை சிலர் மத அடிப்படையிலான ஒன்றாக கருதுவதால், மத அடிப்படையிலான ஒரு விடயமாக நோக்குவதே முறையாகும். முகத்தை மறைக்கும் பெண்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதென்றால், ஹெல்மட் அணிவதும் பிழை தானே ( முகம் அறியும் வண்ணம் ஹெல்மட் அணிவது சாத்தியமற்ற ஒன்று)! பாதைகளில் ஹெல்மல் அணியாமல் சென்றால் அரசே தண்டம் விதிக்குமல்லவா? ஹெல்மட் அணிய முடியுமென்றால், ஏன் புர்கா அணிய முடியாது? இதுவே புர்கா அணிவது தவறான ஒன்றல்ல என்பதை நிறுவ போதுமானது. 

புர்கா அணிவதால், அங்கு மறைக்கப்படுவது ஆண், பெண் வேறுபாடும், குறித்த நபர் யாரென அடையாளம் கண்டுகொள்ள முடியாமையுமாகும். பொதுவாக முகமூடும் பெண்கள் ஆண் துணையின்றி எங்கும் தனித்து செல்ல மாட்டார்கள். இதுவே இஸ்லாமிய வழி காட்டலுமாகும். குறித்த ஆணை வைத்து, குறித்த பெண் யாரென்பதை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமல்லவா?

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் முக மூடுதலுக்குமிடையில் எவ்வித சம்பந்தமுமிருக்கவில்லை. யாருமே முகம் மூடிச் சென்று குறித்த பாதக செயலை செய்திருக்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் முக மூடுதலை தடை செய்தார்கள்? இனவாதிகள் நிலையை சாதகமாக கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக தங்களது மனதில் மிக நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வைத்திருந்த ஒன்றை செய்து முடித்தார்களெனலாம். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்? 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணம் புர்காவல்ல. மதங்களுக்கிடையிலான புரிதலின்மையே! மதங்களுக்கிடையிலான புரிதல் உரிய முறையில் இருந்தால், தேசியத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்வராது, புர்கா அணிந்து செல்லவும் பிரச்சினையிருக்காது. இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்த தகுந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை மனோ போன்றவர்கள் உணர்ந்துகொள்வதோடு, தேசிய ஒருமைப்பாட்டமைச்சர் என்ற வகையில் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

0 Comments: