Headlines
Loading...
சில நிபந்தனைகளை ஏற்க சஜித் இணக்கம், பரபரப்பான நிலையில் இன்று கூடுகிறது  ஐ.தே.க. செயற்குழு..!

சில நிபந்தனைகளை ஏற்க சஜித் இணக்கம், பரபரப்பான நிலையில் இன்று கூடுகிறது ஐ.தே.க. செயற்குழு..!



ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிபந்தனையுடன் களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும் அவரது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மையினை ஒழிக்கும் கால எல்லை தொடர்பான நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கு சஜித் அணியினர் மறுப்பு தெரிவித் துள்ளமையினால் வேட்பாளர் நியமன விவகாரத்தில் நேற்றும் இழுபறி நிலைமை தொடர்ந்தது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் நேற்று பிற்பகல் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோதிலும் மாலைவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலைமை தொடர்ந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விவகாரத்தில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அத்துடன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சஜித்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தானே போட்டியிடவேண்டுமென்று விடாப்பிடியாக செயளற்பட்டு வந்த பிரதமர் ரணில் விககிரமசிங்க நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கட்சியின் சிரேஷ்ட தவைர்களுடான சந்திப்பின்போது நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாஸடிவ ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். 

கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தான் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் 6 மாதத்துக்கும் ஒருவருடத்துக்குமிடைப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை முற்றாக ஒழிக்க வேண்டும், புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டும், ஒன்றிணைந்த வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இதற்கான இணக்கத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். 

பிரதமரின் இந்த நிபந்தனைகள் தொடர்பில் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ அணியினர் நேற்றுக்காலை ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தனர்.இதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

நிதியமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காஙகிரஸின தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் சஜித் அணியினரின் சார்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபிர் ஹாசிம், எரான் விக்கிரமரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிபந்தனைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் 6 மாதம் முதல் ஒரு வருட காலத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கும் நிபந்தனைக்கான காலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சஜித் அணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நான்கு வருட காலத்தில் ஒழிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பது என்றும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கிம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இந்தச் சந்திப்பையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்திப்பதற்கு முயன்றுள்ளனர். ஆனாலும் பிரதமர் கூட்டத்தில் இருந்தமையினால் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை சஜித் பிரேமதாஸ எடுத்துக்கூறியுள்ளதாக தெரிகின்றது. ஆனாலும் ஒருவருட காலத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியதாகவும் அந்த விடயத்தில் விடாப்பிடியாக நின்றதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் இழுபறி நிலை நேற்று மாலை வரை தொடர்ந்தது. 

நிபந்தனைகளுக்கு சஜித் அணியினர் இணக்கம் தெரிவிக்காவிடின் இன்று கட்சியின் செயற்குழுவில் வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்தி தீர்வு காண்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அணியினர் திட்டமிட்டுள்ளனர். செயற்குழுவில் இந்த நிபந்தனைகள் தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றி அதன் பின்னர் வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிபந்தனைகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒருவருடகாலத்துக்குள் ஒழிக்க வேண்டுமென்ற நிபந்தனையைத் தவிர ஏனைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள சஜித் அணி தயாராகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் பெரும் கஷ்டப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியான பின்னர் உடனடியாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்துவிட்டு பேரளவில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு சஜித் அணியினர் விரும்பவில்லை என்று அந்த அணி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயத்திலேயே இழுபறி நிலை நீடித்து வருகின்றது.

0 Comments: