- எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடனோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுடனோ, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்புபட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என சி.ஐ.டி. கடந்த வருடம் வழங்கிய அறிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.யூ. ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அப்போதைய ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர், இவர்கள் மூவர் குறித்தும் உள்ள முறைப்பாடுகளை பொறுப்பேற்க பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் கொண்ட குழுவை நியமித்தார்.
அந்தக் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பின்னர், சி.ஐ.டி.யிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டன. அதன் பின்னர் சி.ஐ.டி.யின் அப்போதைய பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஊடாக அந்த விசாரணையின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பட்டது.
பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி.யின் விசாரணை அறிக்கையுடன் இணைத்து, குறித்த மூவருக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லை என நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, அதே பதில் பொலிஸ் மா அதிபர் தற்போது, சி.ஐ.டி. தனக்கு வழங்கிய குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் அதில் உள்ள விடயங்கள், விசாரணை முன்னெடுக்கப்பட்ட முறை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவே இவ்வாறு எஸ்.ஐ.யூ.விடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவிடம் கேட்டபோது ‘ மூன்று அரசியல்வாதிகள் தொடர்பில், அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என சி.ஐ.டி.யால் வழங்கப்பட்ட அறிக்கை குறித்து எஸ். ஐ.யூ. விசாரணை ஒன்றை முன்னெடுக்கிறது.’ என உறுதி செய்தார்.

0 கருத்துகள்