புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
புத்தளம், கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அலி சப்ரி ரஹீம் எம்.பியின் பாராளுமன்றச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ், பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி, கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் நஸீர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், அலி சப்ரி ரஹீம் எம். பி மேலும் கூறியதாவது,
"அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளினது புரிந்துணர்வு, தியாகத்தினாலும், மக்களின் ஒற்றுமையினாலுமே நீண்டகாலத்தின் பின்னர், இந்த மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது.
இத்தலைமைகளினதோ கட்சிகளினதோ நம்பிக்கையை ஒருபோதுமே சிதறடிக்கமாட்டேன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நான், ஒருபோதும் கட்சித் தலைமைக்குத் துரோகமிழைக்கப் போவதில்லை. அதுபோன்று, தலைமை எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு அரசியலை மேற்கொள்வேன்.
நமது மாவட்ட மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகள் மற்றும் நலனோம்புத் திட்டங்களை நிறைவேற்ற, மக்கள் காங்கிரஸ் தலைமையுடன் இணைந்து உழைப்பேன்.
அரசுடன் நான் இணையப்போவதாக கதைகள் வெளிவருகின்றன. எனது எதிர்கால முடிவுகள் எவையும் கட்சித் தலைமையின் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்காது. அத்துடன், குறுக்குவழியாலோ, பின்கதவாலோ பதவிகளை தேடிச் செல்லமாட்டேன். நேர்மையான அரசியல் கலாச்சாரமொன்றை பின்பற்றுவேன்" என்றார்.
Post a Comment