Top News

வன்னியில் அதிகளவிலான காடுகள் அழிக்கப்படுவது, ஆபத்தானது - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.


வன்னி பிரதேசத்தில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது. இது வன்னிக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குள் அபாயகரமானது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சேவைகளை செய்துள்ளோம். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மூன்று இலட்சம் மக்களை தங்க வைத்து அவர்களுக்கான நலனோம்பு வேலைகளை செய்துள்ளோம். அந்த காலகட்டத்தில் அவர்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

அதேநேரம் நிலங்களை இழந்த மக்களுக்கு அவர்களுடைய நிலங்களில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். பிழையான வழிகளில் சென்றிருந்த இளைஞர்கள், யுவதிகளை சரியான வழியில் செல்வதற்கும் வழிகாட்டியிருந்தோம். அந்த கடமைகளை நாம் கச்சிதமாக செய்தோம்.

அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சாள்ஸ் மற்றும் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களுடன் இணைந்து அதனை முன்னெடுத்தோம். அதனை சிறப்பாக செய்ய அரச அலுவலர்களும் கைகோர்த்து இருந்தார்கள். 

இன்று வன்னி பிரதேசத்தை பார்க்கின்ற போது மிகவும் கவலைக்கிடமான நிலையை அவதானிக்கின்றோம். இங்கு இருக்கின்ற அதிகளவிலான வனப் பிரதேசங்கள் அவசர அவசரமாக, தீவிரமாக அழிகப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கையில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும். வடக்கு பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்படுவது என்பது வடக்குக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் அபாயகரமானது. இந்த காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகளும் எம்மோடு கைகோர்க்க வேண்டும். பாதுகப்பு தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக எமக்கு ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச மட்டத்தில் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களது பிரதேசங்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். பிரதேசங்களில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து பாதுகாப்பான பயணத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

-வவுனியா தீபன்-

Post a Comment

Previous Post Next Post