இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்த பங்களிப்புக்கள் பற்றி சமூகக் கலந்துரையாடல்கள் (social dialogues) இடம்பெறுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான போது இலங்கையில் வர்த்தகம் செய்த பெரும்பாலான அரபு வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார்கள்.
அரபு வணிகர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதன் மூலம் நாட்டின் பொருளாதரத்திற்கு பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்பதை அன்றைய அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர் 2ஆம் அக்போதி (King Agbodhi II ) அவர்கள் அறிந்துகொண்டார். அரபு வர்த்தகர்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான முழு சமய உரிமைகளும் வழங்கப்படும் என்றும் மன்னர் உறுதியளித்தார்.
பின்னர் மன்னர் 2ஆம் அக்போதி அவர்கள் தனது விஷேட தூதுவர் ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்திப்பதற்காக மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார். இஸ்லாம் சமயத்தின் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணத்தை தனது தூதுவரிடம் அனுப்புமாறும், அதன் மூலம் இலகுவாக அந்த சமயத்தை இலங்கையில் உள்ள அரபு வர்த்தகர்களுக்கு பின்பற்றலாம் என்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன்னர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மன்னரின் தூதுவர் ஜித்தா துறைமுகத்தைை சென்றடைந்தார். பின்னர் தரைமார்க்கமாக மதீனா நகரை சென்றடைந்தார். இலங்கைத் தூதுவர் அங்கு சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த உலகை விட்டும் பிரிந்திருந்தார்கள். அபூபக்ர் (றழி) என்பவரே அன்று மதீனாவை ஆட்சிசெய்து கொண்டிருந்தார். தூதுவர் அவரை சந்தித்து அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர் 2ஆம் அக்போதி அவர்களின் கடிதத்தை ஒப்படைத்தார்.
பேராசிரியர் தயா அமரசேகர
சமூகவியல் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
நன்றி:- சிராஜ் மஸ்ஹுர்
