(எஸ்என்.ஹஸ்மி)
சிறைக்கைதிகள் தொடர்பில் மனிதாபிமானமாக நோக்கி அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நான் இன்று பணிப்புரை விடுத்துள்ளேன்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதன் காரணமாக 12,000 க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர்.
அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி புனர்வாழ்வுத் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் இன்று வலியுறுத்தினேன்.
சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்வுகளை பரிந்துரைக்கவும், இன்று, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போதே இவற்றை நான் தெரிவித்தேன்.
சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் நெரிசலைக் குறைக்க, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில், பொருத்து முறைமையிலான சிறைச்சாலைகளை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராயுமாறும் நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகளை ஆராய்ந்து, அது போன்ற வசதிகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன்.
இரசாயன பகுப்பாய்வாளர், சட்டமா அதிபர் மற்றும் காவற்துறைத் திணைக்களங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக ஏராளமானோர் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
சுங்கத் திணைக்களம், காவற்துறை, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இணைத்து - ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவி தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் அறிவுறுத்தினேன்.
நீதி அமைச்சர் எம். யூ. எம். அலி சப்ரி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மற்றும் இதனுடன் தொடர்புபட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

0 கருத்துகள்