கொவிட்டில் மரணிப்பவர்களை பலாத்காரமாக எரிப்பதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். கொவிட் தொற்றாளர்கள் மரணித்தால் அவர்களின் வைரஸும் மரணித்துவிடும் என சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் தெரிவித்தும் அரசாங்கம் நினைத்த பிரகாரம் செயற்படுவது யாரையாவது திருப்திபடுத்தவா என்ற சந்தேகம் எமக#3021;கு இருக்கின்றது எனகொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பொரளை கனத்தை மயானத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்றாமல் அரசாங்கம் கொவிட்டில் மரணிப்பவர்களை நினைத்த பிரகாரம் எரித்து வருகின்றது. கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த நோயாளிகளை பாரிய குற்றவாளிகள் போன்றே அரசாங்கம் அவர்களை பார்த்து வருகின்றது.
மரணம் ஏற்பட்டால் அந்த உறவினர்களுக்கு கூட பார்க்கவிடாமல் அவர்களின் மத வழிபாடுகளுக்கு இடமளிக்காமல் பலாத்காரமாக எரிக்கும் செயலை ஆரம்பித்திருக்கின்றது.
கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் முடியும் என சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் பலர் தெரிவித்துவருகின்றனர். ஆனால் அரசாங்கம் எதனையும் பொருட்படுத்தாது நினைத்த பிரகாரம் செயற்படுட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் யாரையாவது திருப்திப்படுத்த மேற்கொண்டுவருகின்றதாகவே எமக்கு தோன்றுகின்றது.
அத்துடன் கொவிட் தொற்றை யாரும் வேண்டுமென்று ஏற்படுத்திக்கொள்வதில்லை. நாங்கள் யாரும் பலாத்காரமாக இந்த தொற்றை கொண்டுவரவும் இல்லை. மாறாக அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இல்லாததனாலே எமது நாட்டுக்கு கொரோனா வந்தது.
அதற்கு ஆட்சியாளர்களே பொறுப்பு கூறவேண்டும். ஆனால் அரசாங்கம் மக்களை குற்றவாளியாக்கி, மரணிப்பவர்களை பலாத்காரமாக எரித்து வருகின்றது. இதனை நிறுத்தவேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரம் அவர்களின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள இடமளிக்கவேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம்.
அதனால் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்ய அனுமதிப்பது போல் அடக்கம் செய்யவும் அனுமதிக்கவேண்டும். அதற்காகவே கட்சி பேதமின்றி அனைவரும் இங்கு கூடியிருக்கின்றனர் என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Posted in:
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Newer Post Older Post Home
