சிறுவன் சுதைஸுக்கு 13 வயதாகிறது. புற்று நோயில் பாதிக்கப்பட்டு, மஹரகம புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவ ரீதியில் சுதைஸ் காப்பாற்றப்படும் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சுதைஸின் பின்னால் அவரை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டுமென மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று, தன் சக்திக்குட்பட்ட பல சுமைகளை சுமந்து கொண்ட அவரின் அன்புத் தந்தை சமீம் மவ்லவியும் அவர் குடும்பமும் இறைவனின் அருளை மட்டுமே நம்பி நிற்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு இறைவன் சுவர்கத்தை தருவான் என்ற உயரிய நம்பிக்கையுடனும், இறைவன் எனக்கு நிறையவே அருள் செய்துள்ளான் என்ற இறைவன் மீதான நன்றியுணர்வும் குறையாது 13 வயது சிறுவன் அன்பு மகன் சுதைசின் ஏகத்துவப் பிடிப்பு மெய்சிளிர்க்க வைக்கிறது.
13 வயதில் குர்ஆனின் 12 ஜுஸ்வுக்களை மனனமிட்டுள்ளார் சுதைஸ்.
கடைசியாக மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2 ஜுஸ்வுக்களை மனனமிட்டிருந்தார்.
அழகிய குரலில் அவர் குர்ஆனை ஓதி தொழுகை நடத்திய அந்த நாட்களை நினைக்கும் போது கண்கள் கலங்கி, அவருக்காக இறைவனிடம் கையேந்த எண்ணம் கொள்கின்றன.
கொரோனா இரண்டாம் அலையின் போது லொக்டவுனில் சிக்கிய மக்களுக்கான தொடர் உலருணவுப் பொருட்களை கொள்கை சொந்தங்கள் இணைந்து மேற்கொண்ட நாட்களில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்த பின் தன்னால் முடிந்த உதவிகளை உலருணவுப் பொருட்கள் பொதி செய்யும் வேலையில் இணைந்து செய்வார்.
தற்போது சுதைசின் நிலை மிகவும் கவலைக்கிடமாகி விட்டது. “அல்லாஹ்வே எனக்கு விரைவில் நல்ல மரணத்தை தந்து மரணத்தின் பின்னர் நிம்மதியான மறுமை வாழ்வை தந்து விடு” என்று அடிக்கடி சுதைஸ் பிரார்த்திக்கிறார் என்று குழந்தையின் தந்தை, நண்பர் சமீம் மவ்லவி கூறிய தருணங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது.
அந்த நிமிடம், என் இறுதி முடிவு எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்ள தயார் என்பதை தன் தைரியமிக்க சிரித்த முகத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சுதைஸ்.
13 வயது தான். அவர் எம்முடன் நெருங்கிப் பழகிய நாட்கள் குறைவுதான். ஆனால் எம் உடன் பிறப்பாகவே மாறிப்போனார்.
உங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் கேளுங்கள் முடிந்த வரையில் பெற்றுத்தருகிறோம் என நண்பர் அப்துர் ராஸிக் கேட்ட போது “பெட்ரியில் இயங்கும் விளையாட்டு பெகோ ஒன்று தான் வேண்டும்” என மழலை பிள்ளையின் பதிலை அவர் கூறிய நிமிடங்கள் நெஞ்சம் கணத்து விட்டது.
புனிதமிக்க இந்த ரமழானுடைய மாதத்தில் அன்பு சகோதர, சகோதரிகள் அனைவரும் உங்கள் பிரார்த்தனையில் சிறுவன் சுதைஸையும் மறக்காது இணைத்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 6:17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:
‘இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750
அன்புடன் ரஸ்மின்

0 கருத்துகள்