தனியனின் ஆட்டத்தால் வீழப்போவது யார்.....?

ADMIN
0

 




ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லவுள்ளார். அவர் பாராளுமன்றம் செல்லப் போகிறார் என்ற செய்தி வெளியாகியதும் அரசியலில் சல சலப்பு ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. தனியொருவர் என்ன செய்யப் போகிறார் என கணக்கில்கொள்ளாது விட்டிருக்கலாமே! இதுவே அவருடைய ஆற்றல் எனலாம். ரணில் மக்கள் செல்வாக்கற்றவராக இருப்பினும் சிறந்த அரசியல் இராஜதந்திரி. அதுவே அரசியலில் சல சலப்பு ஏற்பட காரணமாகும். இந்த சல சலப்புக்கள் ஏன் என ஆராய்வோம்.


தற்போதைய ஆளும் அரசு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சியை எதிர்க்கட்சியினர் சிறந்த முறையில் கையாழ்கிறார்களா என்றால், இல்லையென்றே கூற வேண்டும். ஜே.வி.பி, ஹரின் பெர்னான்டோ, மனுஷா நானயக்கார, முஜிபுர் ரஹ்மான் போன்றோர் இல்லையென்றால் எதிர்க்கட்சி என்ற ஒன்று உள்ளதை கூட மக்கள் மறந்துவிடுவார்கள். அந்தளவு எதிர்க்கட்சி அரசியல் அமைந்துள்ளது. இது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் திறமையற்ற தலைமைத்துவத்தின் விளைவு என்ற கதையாடல்கள் ஆரம்பித்துள்ளன. " உங்களால் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது " என ஹரீன் சஜிதிடம் கூறியதாக சில செய்திகள் கூறுகின்றன. தான் அவ்வாறு கூறவில்லை, " இன்னும் உங்களது செயற்பாட்டை பலமாக மாற்ற வேண்டும் " என்றே கூறியதாக ஹரீன் கூறியிருந்தார். இவை இரண்டுக்கும் பாரிய வேறுபாடில்லை. சஜித் மீது ஹரீன் போன்றவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை இவ் விடயம் துல்லியமாக்கின்றது. ஒரு குறித்த எண்ணிக்கையினர் ஐ.தே.கவோடு இணையலாம் என்பதற்கு இதுவும் ஓர் சான்று.


ஐக்கிய மக்கள் சக்தியானது முழுமையாக பங்காளி கட்சிகளில் தங்கியிருக்கும் ஒரு கட்சியாகும். சரியான முறையில், தனது கட்சியினரையும், பங்காளி கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயற்பட ஐ.ம.சவின் தலைவர் சஜிதால் முடியவில்லை என்பதே உண்மை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜிதை ஜனாதிபதி வேட்பாளராக பலரும் ஏற்றுக்கொண்டிருந்தாலும், வேறு வழியின்றி தலையசைத்தவர்களே அதில் அதிகம். தற்போது சஜிதை தலைவராக ஏற்க சிலர் விரும்பவில்லை, இன்னும் சிலர் உயரிய அரசியல் அதிகாரங்களை மையப்படுத்தி காய் நகர்த்துகின்றனர், சிலர் சஜித்தின் தலைமைத்துவ ஆற்றலில் நம்பிக்கையிழந்துள்ளனர். இப்படி பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். சஜித் தலைமையிலான ஐ.ம.சக்தியில் சில குறைபாடுகள் இருப்பதை மனோ கணேசன் போன்றவர்கள் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலுள்ள விடயங்களை விட எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பாரிய காய் நகர்த்தலொன்று நடைபெற்று வருகிறது. தற்போது மொட்டு அணியினர் மீது பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், அது சாதமாகி, மக்கள் பார்வை சஜித் மீது விழவில்லை. மக்கள் இன்னுமொருவரையே எதிர்பார்க்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜிதை களமிறக்குவதை விட, பொதுவான வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, வெற்றி பெறுவதே இலகுவான வழியாக பலரும் கருதுகின்றனர். இதற்கு மிகப் பெரும் இடைஞ்சலாக இருப்பவர் சஜிதாகும்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உறுதியாக உள்ளார் சஜித். சஜிதை நம்பி அரச தரப்பில் உள்ளவர்கள் வரத் தயங்குகின்றனர். குறிப்பாக சு.க மற்றும் விமல் அணியினர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டை எதிர்த்து நிற்க கூடும். பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படும் போது இவர்களை மிக இலகுவாக இணைத்துகொள்ள முடியும். பொது வேட்பாளராக கரு ஜயசூரிய களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்கவும், சாத்தியமாக்கவும் சஜித் பலவீனப்படுத்தப்பட வேண்டும். 


சஜித்தின் பலமே ஐ.ம.சக்தி தான். ஐ.ம.சக்தியின் பலம் எம்.பிகளின் எண்ணிக்கையாகும். ஐ.ம.சக்தியில் இருந்து சிலர் மாறினாலே சஜிதின் பலத்தை உடைத்து விடாலாம். ஹரீன் மாறினாலே ஐ.ம.ச பலம் இழந்துவிடும். இவ்வாறு மாறும் இவர்கள் எங்கு செல்ல முடியும். அவர்கள் செல்லக் கூடிய இடம் ஐ.தே.கவை தவிர வேறு எதுவும் பொருத்தமாக அமையாது. ஐ.ம.சக்தியில் இருந்து சிலர் கட்சி மாறினால் பொது வேட்பாளரை ஏற்கும் மனோநிலைக்கு சஜித் உந்தப்படுவார். சிலர் மாறப் போகிறார்கள் என உறுதிபட அறிந்தாலும், அவர் குறித்த மனோ நிலை நோக்கி தள்ளப்படுவார்.


ரணிலை பொறுத்தமட்டில் இராஜ தந்திர நகர்வுகளை நன்கறிந்தவர். தனக்கு பெரிதான மக்கள் செல்வாக்கில்லாத போதும், பல ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தி காட்டியவர். தற்போது ஆட்சி மாற்றத்தை நோக்கி காய் நகர்த்தி பார்க்கும் தேவையும், சாதகமும் உள்ளமை கவனிக்கத்தக்கது. ரணில் சர்வதேச அரசியலை நன்கு புரிந்தவர். சர்வதேசங்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ஜனாதிபதி தேர்தல் போன்ற ஒன்றில் வெற்றிபெற சர்வதேச அரசியல் சக்திகளின் உதவியும் அவசியம். தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மிகைத்துள்ளதால், சர்வதேச பார்வையே இலங்கை மீது தான் உள்ளது. ரணில் பங்காளி கட்சிகளையும் லாவகமாக கையாளக் கூடியவர். எதிர்க்கட்சி அரசியலில் கை தேர்ந்தவர். எதிர்வரும் அரசியலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மிகப் பொருத்தமானவர் ரணில் என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது.


இன்னும் ஒரு சில நாட்களுக்குள் ஐ.ம.சவும், அதன் பங்காளி கட்சிகளும் ஒன்று கூடி பேசவுள்ளதாக அறிய முடிகிறது. இந்த கலந்துரையாடலில் ஐ.தே.கவும், ஐ.ம.சக்தியும் இணைந்து பயணிப்பதன் அவசியம் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால அரசியல் நகர்வுகளும் பேசப்படலாம். இதன் பிறகு ஐ.ம.சக்தியின் பங்காளிக் கட்சிகள் தீர்க்கமான முடிவுக்கு வரும். சஜிதின் செயற்பாட்டிலேயே ஐ.ம.சவின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும், சஜித் குறித்த நேரத்தில் பொருத்தமான வேட்பாளராக இருந்ததால் ஆதரித்தோம் என சம்பிக்க கூறியிருப்பது, பங்காளி கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளன என்பதையும் துல்லியமாக்க போதுமானதாகும். சஜித் அந் நேரத்தில் பொருத்தமான வேட்பாளராக இருந்தார் என்பதானது, தற்போது அவர் பொருத்தமான வேட்பாளரல்ல என்ற பொருளையும் வழங்கக் கூடியதல்லவா?


ரணில் மொட்டோடு இணையப் போவதான கதையாடல்களையும் அவதானிக்க முடிகிறது. ரணிலுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கில்லை. கட்சியின் செல்வாக்கையே, அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.கவையே மக்கள் தூக்கி வீசியிருந்தனர். இவர் மொட்டோடு இணைந்தால் மிக கேவலமான முடிவை சந்திப்பார் என்பதில் ஐயமில்லை. தற்போதைய ஆளும் அரசு மிகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில், அதனோடு ரணில் ஒருபோதும் இணைய விரும்பமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற மந்திரத்தை மறந்திட முடியாது.


ரணில் மீண்டும் இலங்கை அரசியலில் ஆட்டுவிக்கும் சக்தியாக மிளிர வாய்ப்புகள் அதிகமுள்ளன. ரணிலின் பாராளுமன்ற வருகை சஜிதின் அரசியல் பயணத்தை சூனியமாக்கலாம். அது நிச்சயம் மொட்டுவை அழிக்கும் நகர்வாகவே அமையும். மொட்டுவோடு இணைந்து செல்லும் அரசியலை ரணில் முன்னெடுத்தால், மிகக் கேவலமான அரசியல் ஓய்வை ரணில் சந்திப்பார் என உறுதிபட குறிப்பிடலாம்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default