டெல்டா வைரஸ் மாத்திரமின்றி புதிய வைரஸ் திரிபுகளும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை முழுமையாக திறப்பது பொருத்தமானதல்ல.
இதன்படி ,தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதமாக ஆரம்பித்தமையின் காரணமாக இதுவரையில் பதிவான சகல கொவிட் மரணங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
எனவே தொடர்ந்தும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்காமல் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நேற்று திங்கட்கிழமை காணொளியொன்றினை வெளியிட்டு அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி தலைவர் அதில் மேலும் கூறியதாவது :
அதுவரையில் இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். தடுப்பூசி வழங்கும் பணிகள் மிகவும் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
இவ்வாறான நிலையில் சகல அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை கர்பிணிகள் , சிறு குழந்தைகளுடைய தாய்மாருக்கு ஆபத்தாகும். டெல்டாவுடன் புதிய திரிபுகளும் பரவ ஆரம்பித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தான் செயற்படுவதா?
மேலும் ,இவ்வாறான தீர்மானங்கள் ஊடாக அரசாங்கமே நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. டெல்டா அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டை முழுமையாக திறப்பதற்கான பொறுத்தமான சந்தர்ப்பம் இதுவல்ல. இதுவரை பதிவாகியுள்ள மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்பதோடு , இந்த மரணங்களின் சாபமும் அரசாங்கத்தையே சேரும்.
எனவே தொடர்ந்தும் மக்களின் வாழக்கையுடன் விளையாடிக் கொண்டிருக்காமல் உரிய நேரத்தில் பொறுத்தமான தீர்மானங்களை எடுக்குமாறும் , சுகாதார கட்டமைப்பு தேவையான வசதிகளை தாமதமின்றி ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
