புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து நிதி அமைச்சர் பஷிலுடன் இந்திய வெளிவிவகார செயலாளர் பேச்சு



ஆர்.யசி


இந்தியா இலங்கை பொருளாதார மற்றும் வணிக உறவுகள் மற்றும் பரஸ்பர நன்மைக்கான கூட்டு திட்டங்களை முன்னெடுப்பதும், புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், கொவிட்19 வைரஸ் வைரஸ் தொற்றுக்கு பின்னரான புதிய பொருளாதார மீட்பு நகர்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பயணிக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்று கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அரச தரப்பினருடன் கலந்துரியாடியிருந்ததுடன் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.


நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக நட்புறவு செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்தியா இலங்கை பொருளாதார மற்றும் வணிக உறவுகள் மற்றும் பரஸ்பர நன்மைக்கான கூட்டு திட்டங்களை முன்னெடுப்பதும், புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


அதேபோல் கொவிட்19 வைரஸ் பரவல் நிலைமைகளை அடுத்து பொதுவாக உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்கு பின்னரான புதிய பொருளாதார மீட்பு நகர்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பயணிக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட புதிய முதலீடுகள் தொடர்பிலும் முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதனை அடுத்து இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா இன்று பிற்பகல் இலங்கை வெளியுறவு செயலாளர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகேவுடன் அரச அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.


தூதுவர் குழு மட்டத்திலான கலந்துரையாடலாக இது முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இரு தரப்பு உறவு, ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் இராஜதந்திர மட்ட நட்புறவுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.


இதற்கு முன்னதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் இந்த சந்திப்புகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது இலங்கையில் முன்னெடுக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் அதனுடன் இணைந்த கல்வித்துறை சார் வேலைத்திட்டங்கள் என நான்கு திட்டங்களை கூட்டாக ஆரம்பித்து வைக்கும் நிகழும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்