கனமழை காரணமாக நீர் மின் உற்பத்தி 75 வீதமாக அதிகரிப்பு : தற்போதைய டொலர் நெருக்கடி நிலையில் சற்று ஆறுதல்




அண்மையில் பெய்த கனமழை காரணமாக நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் சுமார் 75 சதவீதமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.


தற்பொழுது தினமும் சுமார் 44 ஜிகாவோட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.


நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிரதான நீர்த் தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 94 வீதத்தை அண்மித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


சில நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் 100 வீதத்தை எட்டியுள்ளது. விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் கொத்மலை நீர் மட்டமே இவ்வாறு உயர்ந்துள்ளது.


நீர் மின் உற்பத்தியில் இத்தகைய அதிகரிப்பு தற்போதைய டொலர் நெருக்கடி நிலையில் சற்று ஆறுதலை அளிப்பதாக அறிவிக்கப்படுகிறது.


நீர் மின் உற்பத்தி குறைவாக இருந்தால் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அதிக டொலர்கள் செலவாகும் என்பதால், டொலர் நெருக்கடி மேலும் அதிகரித்திருக்கும் எனவும் அமைச்சு தெரிவித்தது.


கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருவதோடு இன்றும் சில தினங்கள் இந்த நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்