பிணைமுறி மோசடி : முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்ரஜித் குமார சுவாமியின் சாட்சியத்தை பெற அனுமதிப்பதா இல்லையா ? - தீர்மானத்தை அறிவிக்க திகதி குறிப்பு

ADMIN
0


(எம்.எப்.எம்.பஸீர்)


மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முதல் சாட்சியாளரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமியின் சாட்சியத்தினை வீடியோ தொழில் நுட்பம் ஊடாக பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றை கோரியுள்ளது.


எனினும் இந்த கோரிக்கைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகள் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், வீடியோ தொழில் நுட்பம் ஊடாக சாட்சியம் பெற அனுமதிப்பதா இல்லையா என்ற நீதிமன்றின் தீர்மானத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்தது.


இந்த பிணை முறி மோசடி குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு 17 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.


மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையிலேயே இவ்வாறு அவ்ழக்கு விசாரணைக்கு வந்தது.


இதன்போது வழக்குத் தொடுநர் சட்டமா அதிபருக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாபதி சட்டத்தரணி பிரியந்த நாவான, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் வழக்கின் முதல் சாட்சியாளரான மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமியின் சாட்சியத்தை, வீடியோ காணொளி தொழில் நுட்பத்தின் ஊடே நெறிப்படுத்த தனக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.


தற்போதைய கொவிட் தொற்று பரவல் சூழல் உள்ளிட்ட காரணிகளை கருத்திற் கொன்டு, சாட்சியாளரால் நேரில் மன்றில் ஆஜராக முடியாத நிலை காணப்படுவதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான குறிப்பிட்டுள்ளார்.


எனினும் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, அனில் சில்வா, அனுஜ பிரேமரத்னவும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலகவும் அக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.


ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, இந்த வழக்கில் சுமார் 17790 ஆவணங்கள் உள்ள நிலையில், அதில் 500 இற்கும் பேற்பட்ட ஆவணங்கள் தொடர்பில் முதல் சாட்சியாளர் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், வீடியோ கானொளி ஊடாக அது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டி , தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.


ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.


இந்நிலையிலேயே, வீடியோ கானொளி ஊடாக சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளிப்பதா இல்லையா என்ற நீதிமன்றின் தீர்மானத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default