Headlines
Loading...
காவித் துண்டு "போராட்டம் அல்ல, ஹிஜாபுக்கு எதிர்வினை" : இந்துத்துவ அமைப்புகள் தூண்டியதாக ஒப்புக் கொள்கிறார் பாஜக எம்எல்ஏ - உடுப்பியில் இருந்து கள நிலவரம்

காவித் துண்டு "போராட்டம் அல்ல, ஹிஜாபுக்கு எதிர்வினை" : இந்துத்துவ அமைப்புகள் தூண்டியதாக ஒப்புக் கொள்கிறார் பாஜக எம்எல்ஏ - உடுப்பியில் இருந்து கள நிலவரம்



முகத்தில் கறுப்புத்துணி, கழுத்தில் காவிச் சால்வை. இந்த அடையாளங்களுடன் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷம் எழுப்பிய மாணவர்கள். இந்தக் காட்சி நடந்தது பெபிப்ரவரி 8ஆம் திகதி.


ஹிஜாபுக்கு உரிமை கோரிய மாணவிகளுக்கு முன்பாக திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முன்பாக இருந்தவர்களில் மாணவி அகாங்ஷா எஸ் ஹஞ்சினாமத்தும் ஒருவர்.


கர்நாடகாவின் கடலோர நகரான உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு (எம்ஜிஎம்) கல்லூரி வளாகத்தில், அடுத்த வகுப்புக்கான மணி அடித்த பிறகு, இந்த மாணவர்கள் குழு, ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளுக்கு நேருக்கு நேராக நின்றனர்.


அன்றைய நாளில், கர்நாடகாவில் உள்ள எம்ஜிஎம் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக மாணவர்கள் காவித்துண்டு போட்டுக் கொண்டும் அதை தலையில் சுற்றிக் கொண்டும் போராட்டம் நடத்தினர்.


அகாங்ஷாவை அவரது வீட்டில் நாம் சந்தித்தோம். அப்போது, தன்னிடம் இருந்த காவி நிற சால்வையைக் காண்பித்தார். அன்றையதினம் முழு ஏற்பாட்டுடன் கல்லூரிக்கு சென்றதாக அவர் நம்மிடையே குறிப்பிட்டார்.


"நாங்கள் அனைவரும் சேர்ந்தே அதை முடிவு செய்தோம். நான் காவி சால்வையை பையில் வைத்திருந்தேன். கல்விக்கு நடுவில் மதத்தை கொண்டு வருவதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை காட்ட நாங்கள் விரும்பினோம்," என்கிறார் அவர்.


இந்த போராட்டத்துக்கு முந்தைய நாளில், முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்தால் தாங்களும் காவி சால்வை அணிவோம் என்று பல இந்து மாணவர்கள் பள்ளி முதல்வரிடம் கூறியுள்ளனர்.


இதைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவிகளை சந்தித்த முதல்வர், "இனிமேல் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிந்து வராதீர்கள்," என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


இத்தனைக்கும் இந்த நிகழ்வு நடக்கும் முந்தைய நாள்வரை எம்ஜிஎம் கல்லூரியின் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


தங்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய சில முஸ்லிம் மாணவிகள், பள்ளி முதல்வருடன் நடந்த உரையாடலை உறுதிப்படுத்தினார்.


முதல்வரின் இந்த வேண்டுகோளால் நாங்கள் "ஆச்சரியமடைந்தோம்" என்று அவர்கள் கூறினார்கள்.


முஸ்லிம் மாணவி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "இந்த கல்வி நிறுவனத்தில் ஹிஜாப் அணியலாம் என்று மாணவர் சேர்க்கை நேரத்திலேயே சொன்னார்கள். அதனால்தான் வேறு கல்லூரியில் அட்மிஷன் எடுக்கவில்லை. இப்போது கல்வியாண்டின் நடுவில் இந்த புதிய விதிகளை போடுவது தவறு. ஹிஜாப் எங்களின் அடையாளம். அதை அணிவது அரசியலமைப்பு உரிமை. இது எங்களுக்கு முக்கியமானது. இப்படித்தான் நாங்கள் வாழ வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை," என்கிறார்.


அகாங்ஷாவின் வகுப்பிலும் மூன்று மாணவிகள் ஹிஜாப் அணிந்துள்ளனர். அவரது கூற்றுப்படி, அந்த மாணவிகளின் ஆடை அடையாளம் இவருக்கு ஒருபோதும் சங்கடமாக இருந்ததில்லை,


"நான் என் நண்பர்களை மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் பிரிக்கவில்லை. விருப்பப்படி நண்பர்களை உருவாக்குங்கள். இந்து - முஸ்லிம் போன்ற அடையாளங்கள் எங்களுக்கு பிரச்சினை அல்ல." பிறகு பிரச்னை எப்படி தீவிரமானது?


சர்ச்சையின் தொடக்கம்
உடுப்பி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஒற்றை கொள்கை என எதுவும் இல்லை.


எம்ஜிஎம் கல்லூரியை போலவே, பல தனியார் கல்லூரிகள் அவற்றின் விதிகளில் ஹிஜாபுக்கு அனுமதி அல்லது கட்டுப்பாடு பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன.


அதே சமயம், அரசு கல்லூரிகளில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விதி நிர்ணயிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ஹிஜாப் அணிய உரிமை கோரி பலரும் குரல் எழுப்பியதால், அந்த கல்லூரியில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டது.


கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, மகளிருக்கான அரசு பல்கலைக்கழக முன் கல்லூரி வகுப்புகள் திறக்கப்பட்டதும், பதினோராம் வகுப்பில் (அல்லது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய) அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர் பாட வகுப்புகளில் பயிலும் மூத்த மாணவிகள் ஹிஜாப் அணிந்திருப்பது தெரிய வந்தது. அதனால் தங்களுக்கும் அதுபோலவே அனுமதி வேண்டும் என்று அவர்கள் கோரினர்.


உடுப்பியில் அனைத்து அரசு மேல்நிலை கல்லூரிகளிலும் சீருடைகள் குறித்த முடிவு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான கல்லூரி வளர்ச்சிக் குழுவால் எடுக்கப்படுகிறது.


ஆனால், இந்த விவகாரத்தில் மாணவிகளின் கோரிக்கைகளை உடுப்பி பாஜக எம்எல்ஏ ரகுவீர் பட் ஏற்கவில்லை.


பிபிசி உடனான அவரது கலந்துரையாடலின்போது, " இது மாணவர்களின் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம். அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும்" என்று அவர் கூறினார்.


பாஜக எம்எல்ஏவின் இந்த முடிவு அவரது கட்சியின் சித்தாந்த தாக்கத்தை கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதை தாம் நம்பவில்லை என்கிறார் ரகுவீர் பட்.


"அரசியல் செய்ய வேறு பிரச்சினைகள் உள்ளன, இது கல்வி தொடர்பான விஷயம்" என்கிறார் அவர்.


எனினும், இந்து மாணவர்கள் மத அடையாளங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்து ஜாக்ரன் வேதிகே போன்ற இந்துத்துவ அமைப்புகள் ஆதரவளித்ததை ரகுவீர் பட் ஒப்புக் கொண்டார்.


சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல காணொளிகளில், கர்நாடகாவின் பல புதிய பகுதிகளில் இருந்தும் காவி நிற சால்வை மற்றும் துண்டுகள் மாணவர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்ததை பார்க்க முடிந்தது.


இது குறித்து ரகுவீர் பட் கூறுகையில், "மேடம், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது. கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற ஒரு வகுப்புவாத அமைப்பு சூழ்நிலையை கெடுக்கும் போதும், ​​பெண்களிடம் அது விதிகளை மீறச் சொல்லும் போதும், எங்களுடைய அமைப்புகளும், இந்துப் பெண்களும் அதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார்.


ஒரு கல்லூரியில் இருந்து தொடங்கிய சர்ச்சை, படிப்படியாக விரிவடைந்து மாநிலத்தின் பல இடங்களுக்கும் பரவியதற்கு 'கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்பே காரணம் என்று ரகுவீர் பட் குற்றம் சாட்டுகிறார்.


செயலுக்கு எதிர்வினை
செயல் - எதிர்வினை - இந்த வார்த்தைகள் உடுப்பியில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன.


கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் உடுப்பியில் 10 சதவீத இஸ்லாமியர்களும், 6 சதவீத கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் வெவ்வேறு பகுதிகளில் வாழாமல் இணக்கமாக வசிக்கிறார்கள். இங்கே அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுகிறார்கள். பழகி வாழ்கிறார்கள். இவர்கள் பல தொழில்களில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.


வீதிகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களைப் பார்ப்பது என்பது இங்கே வழக்கமான விஷயம். ஆனால் தற்போதைய பதற்றமான சூழலில் முஸ்லிம் மற்றும் இந்து மாணவர்களுடன் ஒரே நேரத்தில் பேசுவதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.


எம்ஜிஎம் கல்லூரியின் முஸ்லிம் மாணவி ஒருவர், பெப்ரவரி 8ஆம் திகதி நிகழ்வு இன்னும் தனது மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளதாக கூறுகிறார்.


"போராட்டம் செய்த அனைவரும் எங்கள் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக பெரும்பாலானோர் எனது வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதனால் மிகவும் சோகமாக இருந்தேன். ஏனெனில் எனது சக மாணவர்கள் எனக்கு எதிராகவே அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்," என்கிறார் அவர்.


பெபிப்ரவரி 8ஆம் திகதி, பல இடங்களில் எம்ஜிஎம் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவன மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அனைத்து கல்லூரிகளையும் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவை மீண்டும் திறக்கப்படுமா என்ற சந்தேகம் கூட எழுந்தது.


"மாணவ, மாணவிகளின் செயல்பாடு வெளிப்படையாகவே வெறுப்புணர்வை பரப்பும், இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றும், முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் ஒரு கருத்து பரவ காரணமாகும். வெறுப்புச் சூழல் உருவாகும்," என்று அந்த முஸ்லிம் மாணவி கூறினார்.


கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகாவில் வளர்ந்து வரும் வகுப்புவாதத்திற்கு எதிராக 'கர்நாடகா வகுப்புவாத நல்லிணக்க மன்றம்' செயல்பட்டு வருகிறது.


இதன் மூத்த உறுப்பினர் பேராசிரியர் கே. பனிராஜ், கர்நாடகாவின் பல பகுதிகளில் படிப்படியாக வகுப்புவாத சக்திகள் வலுப்பெற்றுள்ளதாகவும், தற்போதைய சர்ச்சைக்கான அதிரடி எதிர்வினையை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம் என்றும் கூறுகிறார்.


வகுப்புவாதத்தின் வரலாறு - அலசும் பேராசிரியர்
2010ஆம் ஆண்டு முதல் தெற்கு கர்நாடகா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நடந்த வகுப்புவாத சம்பவங்கள் குறித்த தகவல்களை பனிராஜின் அமைப்பு சேகரித்துள்ளது.


தார்மீக காவல்', 'வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு', 'உடல் ரீதியாக நடக்கும் தாக்குதல்', 'மத வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் விளைவித்தல்', 'கால்நடை கண்காணிப்பு' என ஒவ்வோர் வருடமும் சுமார் 100 வழக்குகள் பதிவாகியிருப்பதை இவரது அமைப்பின் தரவு காண்பிக்கிறது.


"1990 களில் ராம ஜென்ம பூமி இயக்கத்திற்குப் பிறகு, ஏபிவிபி அமைப்பின் வேகமான எழுச்சியையும், எஸ்எஃப்ஐ மற்றும் காங்கிரஸ் மாணவர் சங்க வீழ்ச்சியையும் பார்க்கலாம். இதன் மூலம் இந்துத்துவாவின் கடும்போக்கு சித்தாந்தம் மாணவர்களில் பலரிடையே பதிந்து விட்டது தெளிவாகிறது" என்கிறார் பேராசிரியர் பனிராஜ்.


இவரைப் பொறுத்தவரை, முஸ்லிம் மாணவர்களின் உரிமைகளுக்காக மட்டுமே கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவான சிஎஃப்ஐ, அரசியல் ஆதாயங்களுக்காக பிரச்சினையை தூண்டியதாகவும், முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.


ஆனால், இதை சிஎஃப்ஐ அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் அஸ்வான் சாதிக் மறுக்கிறார். தங்களுடைய தரப்பிலிருந்து எவ்வித ஆத்திரமூட்டும் எதிர்வினையும் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.


"காவி நிற துண்டுகளை போட்டுக் கொண்டு மாணவர்கள் வீதிகளுக்கு வந்தபோது ஏபிவிபி தலையிட்டது. பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏ அரசியல் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினர். பின்னர் பிரச்சினை விரிவடைந்தது" என்கிறார் சாதிக்.


இந்த விஷயத்தில் நிலைமை மோசம் அடைய இரு வேறு நிகழ்வுகளை குறிப்பிடுகிறார் அஸ்வான்.


முதலில், அமைச்சர் சுனில் குமாரின் அறிக்கை - "கர்நாடகாவை தலிபான் ஆக்க அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.


இரண்டாவதாக, பாஜக தலைவர் வாசனகெளடா பாட்டீலின் அறிக்கை - "உங்களுக்கு ஹிஜாப் வேண்டுமா, பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்" என்றார் அவர்.


கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்தன. பிறகு அவை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக பகிரப்பட்டு இதுபோன்ற மத உணர்வுகள் தூண்டப்பட்டன.


முன்பே தலைதூக்கிய ஹிஜாப் சர்ச்சை
உடுப்பியில் ஹிஜாப் விவகாரம் தலைதூக்கியது இது முதல் முறையல்ல. கடலோர கர்நாடகாவின் இந்தப் பகுதியில், கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்து 2005ஆம் ஆண்டு முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.


எப்போதெல்லாம் பிரச்சினை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளின் முதல்வர், கல்லூரி கமிட்டி மற்றும் மாணவர் தலைவர்கள் இடையே அந்த விவகாரம் மீது அப்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்படும். ஊடகங்களும் அந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.


இந்த முறை விவகாரம் மிகவும் சிக்கலாகி நீதிமன்றம் வரை சென்றது. மேலும், மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையின் கேள்வியாக அது உருப்பெற்றது.


ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணிவதற்கான தங்களின் 'தேர்வு' எந்த அளவுக்கு தடையற்றதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கேள்வியை இவர்களின் செயல்பாடு எழுப்பியிருக்கிறது.


அதாவது, இதில் மாணவிகள் எந்த அளவுக்கு முடிவை எடுக்கிறார்கள்? மரபுகள், சமூகம், குடும்பம், மதத் தலைவர்கள் எந்த அளவுக்கு முடிவு செய்கிறார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


மஹிலா முன்னடே என்ற பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த மாலிகே, "ஒரு சமூகம் தாங்கள் இலக்கு வைக்கப்படுவதாக உணரும்போது மத அடையாளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது," என்கிறார்.


"கர்நாடகாவில், பர்தா அணியும் வழக்கம் அதிகமாக இல்லை, தலையில் துப்பட்டாவை மட்டுமே முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் சுற்றிக் கொள்வார்கள். ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு அந்த வழக்கம் மாறியது. அதை இப்போதைய தலைமுறை பின்பற்றுகிறது," என்கிறார் மாலிகே.


கர்நாடகாவில் கலப்பின காதல், மாட்டிறைச்சி உண்பது, பசு வதை போன்ற பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


"கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் மற்றும் புர்கா போன்ற மத பழக்க வழக்கங்களை கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால் அதே நேரத்தில் சிறுபான்மை சமூகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை அவர்களின் கோணத்தில் இருந்து பார்ப்பதும் அவசியம்," என்கிறார் மாலிகே.


எம்ஜிஎம் கல்லூரியைச் சேர்ந்த அகாங்ஷாவிடம் நாம் பேசியபோது, ​​ஹிஜாப் உங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என கூறுகிறீர்கள். ஆனால், பிறகு ஏன் காவி சால்வையை அணிய முற்பட்டீர்கள்? என கேட்டோம்.


அதற்கு அவர், "காவி சால்வை எதிர்ப்பு அல்ல, அது ஒரு எதிர்வினை" என்று பதில் தருகிறார்.


இவர் பேசும் "எதிர்வினை" என்பது, இவரைப் போல நடந்து கொள்ளும் மற்ற மாணவர்களை பார்க்கும் போதும் புரிந்தது.


இப்போது இவர் விரும்புவது சமத்துவம். அது அனைவருக்கும் சீருடை உறுதிப்படுத்தப்படுவதன் மூலமே நடக்கும் என்கிறார் அகாங்ஷா.


முஸ்லிம் மாணவிகளுக்காக சமத்துவம் காட்டும் சீருடை, மத பாகுபாட்டின் அடையாளமாகும். எங்களுடைய கல்வி நிலைய வளாகத்தில் அமைதி திரும்ப நாங்கள் காத்திருக்கிறோம், எல்லாம் பழையபடி மாற வேண்டும்," என்கிறார் அவர்.

0 Comments: