Headlines
Loading...
உள்ளூராட்சி, மாகாண சபைத் தேர்தல்களை நடாத்திக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம் - திஸ்ஸ அத்தநாயக்க

உள்ளூராட்சி, மாகாண சபைத் தேர்தல்களை நடாத்திக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம் - திஸ்ஸ அத்தநாயக்க



(நா.தனுஜா)


அரசாங்கத்தினால் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தற்போது உருவாகியிருக்கின்றது. எனவே தாம் ஆட்சிபீடத்தில் இருப்பதை மக்கள் விரும்புகின்றார்களா? இல்லையா? என்ற கேள்வியை அவர்கள் மீண்டுமொருமுறை மக்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும். அதன்படி தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வரும் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்திக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


கம்பளையில் சனிக்கிழமை 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறியதாவது, அண்மைக் காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.


சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருக்கும் அரசாங்கம், அதனூடாக இந்நாட்டு ஊழியர்களுக்குச் சொந்தமான பணத்தைக்கூட கொள்ளையடிப்பதற்கு முயற்சிக்கின்றது.


அரசாங்கத்தின் நிதி நெருக்கடிக்கு மக்கள் பலியாக முடியாதல்லவா? ஏற்கனவே நாட்டு மக்களிடமிருந்து பல்வேறு வரிகள் அறவிடப்பட்டுவருகின்றன.


மக்களைப் பாதுகாப்பதும் அவர்களது பிரச்சனைகளுக்குரிய தீர்வை வழங்குவதுமே அரசாங்கத்தின் கடமையாகும். இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஏதேனும் காரணங்களைக் கூறுகின்ற அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.


இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய முடியாதபட்சத்தில் தாம் ஆட்சிபீடத்தில் இருப்பதை மக்கள் விரும்புகின்றார்களா? இல்லையா? என்ற கேள்வியை மீண்டுமொருமுறை மக்களிடத்திலேயே கேட்டுப் பார்க்க வேண்டும்.


அதன்படி உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதை அரசாங்கத்தினால் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்ற அவ்விரு தேர்தல்களையும் நடாத்திக்காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம்.


அதனூடாகவேனும் மக்களது நிலைப்பாடு என்னவென்பதையும் அவர்கள் தம்மிடமிருந்து விலகிச் செல்கின்றார்கள் என்பதையும் அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியும்.


அடுத்ததாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையக் கூடும் எனக்கூறி கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை முடக்கிய அரசாங்கம், அண்மையில் அநுராதபுரத்தில் பொதுக்கூட்டமொன்றை நடத்தியது.


ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்காத சுகாதாரத் தரப்பினர், ஆளுந்தரப்பின் பொதுக் கூட்டத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்?


'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் அர்த்தம் இதுவா? எது எவ்வாறெனினும் ஒமிக்ரோன் வைரஸ் பரவலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

0 Comments: