Headlines
Loading...
அத்துமீறும் பிக்குகள் இலங்கை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா..? சட்டத்தரணிகள் சங்கம் அதிரடி கேள்வி

அத்துமீறும் பிக்குகள் இலங்கை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா..? சட்டத்தரணிகள் சங்கம் அதிரடி கேள்வி


- நூருல் ஹுதா உமர் -



இனவாதத்தினால் இலங்கை இன்று சுக்குநூறாக உடைந்து சர்வதேசமளவில் விலாசமிழந்து இருக்கும் இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிங்களை மீண்டும் மீண்டும் சீண்டும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். பலாங்கொட கூரக்கல ஜெய்லானி எனும் இடத்தில் முஸ்லிங்களின் 800 வருடங்களுக்கு மேற்பட்ட அடையாள சின்னங்கள் திட்டமிட்டு பிக்குகளினால் அழிக்கப்பட்டுள்ளது. அங்கு பாரிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதை முஸ்லிங்கள் அறியாமலில்லை. தெரிந்து கொண்டும் எமது நாட்டில் அநாவசியமான முரண்பாடுகளை உருவாக்க கூடாது என எண்ணி முஸ்லிங்கள் அமைதி காத்து இருக்கின்றனர் என சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யூசூப் அன்வர் ஸியாத் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள காணியில் புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் கடந்த புதன்கிழமை எடுத்த முயற்சியினால் அந்த பிரதேசத்தில் பதட்டம் நிலவியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் மேலும்,

பிக்குகளை தொடர்ந்தும் தூண்டிவிட்டு முஸ்லிம் பிரதேசங்களுக்குள் இரவோடிரவாக வயல், காடு, மேடு, மலைகளில் பௌத்த சிலைகளை வைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. பொலிஸாரினால் அல்லது அரசினால் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு பிக்குகள் சட்டவரையறைகளுக்கு அப்பால்பட்டவர்களா ? இலங்கை சட்டம் இவர்களுக்கு உரித்ததாகவில்லையா என கேள்வியெழுப்ப எண்ணுகின்றோம். இது இலங்கையர்கள் எல்லோருக்கும் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது.

மனித உரிமை மீறல்கள் குற்றசாட்டை முன்வைத்து ஜெனிவாவில் நிறுத்தப்பட்டிருக்கும் எமது நாடு. இவ்வாறான அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையாது. இப்படியான அத்துமீறல்களை செய்தவர்கள் மீது சரியான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் முஸ்லிங்கள் அல்லது வேறு சமூகங்களை சீண்டிப்பார்க்கும் விடயங்களை பௌத்தசாசன அமைச்சு அனுமதிக்காது உடனடியாக இவ்விடயங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments: