மருந்து இறக்குமதிக்கு வெளிநாட்டு உதவிகளை பெற புதிய கணக்கு அறிமுகம்


மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர்களை வைப்பிலிடக்கூடிய புதிய வைப்பு கணக்கொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


குறித்த கணக்கிற்கு தேவையான அனுமதியைப் பெறுவதற்கான கோரிக்கை நிதி அமைச்சில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நன்கொடைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை நன்கொடையாக வழங்க விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு தரப்பினரும் இந்த புதிய கணக்கிற்கு டொலர்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.