நாம் எந்த நிலையிலும் பலஸ்தீனத்தை ஆதரிப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்


ஜெரூசலேம் என்பது மூன்று மதங்களின், இரண்டு இனங்களின் சொந்த பூமியாகும். அவ்வாறான பூமியினை ஒரு சாராரின் கைகளுக்கு மட்டும்கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள் என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன - இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு வெள்ளிக்கிழமை (22) மாலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

பலஸ்தீன தலைவர் யாசீர் அரபாத் இலங்கைக்கு வந்த நிலையில் அவரை நான் சந்தித்தேன். அப்போது நான் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிளிக்கும்போது, எனக்கு அவர் ஒரு விடயத்தைக் கூறினார். அதாவது யுத்தமொன்றை முன்னெடுக்க நாம் கடுமையாக போராட வேண்டும். எனினும் சமாதானத்தை வெற்றிகொள்ள அதைவிடவும் அதிகமாக போராட வேண்டும் என அவர் என்னிடம் கூறினார். இன்றும் அது என் மனதிலுள்ளது.

சமாதான நோக்கத்தில் தான் பலஸ்தீன அரசாங்கம் செயற்பட்டது. எனினும் இன்று சமாதானம் என்ற  கதவு துண்டு துண்டாக சிதறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலான பேச்சுக்களையும் கவனத்தில் கொள்ளாது சர்வதேச நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்துள்ளன.

இதுவே பலஸ்தீனம் மீதான உலக நாடுகளின் ஒற்றுமையான ஒத்துழைப்புக்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் எந்த நிலையிலும் பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என்றார்.
நாம் எந்த நிலையிலும் பலஸ்தீனத்தை ஆதரிப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாம் எந்த நிலையிலும் பலஸ்தீனத்தை ஆதரிப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் Reviewed by NEWS on December 23, 2017 Rating: 5