சிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

சிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்

சிரியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு கருதி அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர். 

கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு சிரியா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆனால், சிரியா படைகள் ரசாயன தாக்குதல்களில் ஈடுபட்டதாக வெளியாகிவரும் செய்திகளை ரஷியா வன்மையாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க அவசர கூட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், சிரியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, இந்த தாக்குதலை அமெரிக்க போர் விமானங்கள் நடத்தியதாக வெளியிட்ட செய்தி தற்போது மாற்றப்பட்டு, இஸ்ரேல் விமானப்படைக்கு சொந்தமான எப்-15 ரக விமானங்கள் தங்கள் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டி-4 விமானப்படை மீது தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.
சிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் சிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் Reviewed by NEWS on April 09, 2018 Rating: 5