ஓமல்பே தேரர் எச்சரிக்கை!

 Related image

கடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபாரக் கடை ஒன்றுக்கு மாட்டிறைச்சியை பொதி செய்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கது என ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய தேரர் ஒருவர் நகர சபையின் தலைவராக இருக்கும் காலத்தில் மாட்டிறைச்சிக் கடை ஏலத்தில் விடுவதை நிறுத்தியிருந்தார். இது சபையின் பெரும்பான்மைப் பலத்துடன் பெற்ற தீர்மானம். அம்பிலிப்பிட்டிய நகர சபைப் பிரதேசத்தில் 99 வீதமானோர் பௌத்தர்கள். விவசாயம் செய்து அதன் மூலம் வாழும் மக்கள். பௌத்த விவசாயிகளும், இந்து மதத்தினரும் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள்.

அத்துடன், அம்பிலிப்பிட்டிய பிரதேச மக்களின் கருத்தும் இப்பிரதேசத்துக்கு மாட்டிறைச்சிக் கடை தேவையில்லை என்பதாகவே காணப்பட்டது.
இது இவ்வாறிருக்க, புதிதாக நியமனம் பெற்ற நகர சபை உறுப்பினர்களுக்கு செய்வதற்கு எவ்வளவோ பணிகள் இருக்க, மாட்டிறைச்சிக் கடைக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது யாருடைய தேவைக்கு? அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கியதனால் சபைக்கு வருமானம்தான் வருமா? வருமானம் வரும் என்பதற்காக அனுமதிக்கத் தகாத ஒன்றுக்கு அனுமதி வழங்க முடியுமா? இந்தப் பிரேரணை அவசரமாக கொண்டுவருவதற்கு தேவை இருக்கவில்லை. யாருடைய தேவைக்காக இதனை செய்துள்ளனர். 

மாட்டிறைச்சிக் கடையொன்று அம்பிலிப்பிட்டிய நகருக்கு தேவையா என்பதை அப்பிரதேச மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...