குரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா ?உலக வங்கியின் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உக்குவளை குரீவெல ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டட நிர்மாணப் பணிகள் அருகில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் தலையீட்டால் நின்றுபோயுள்ளதோடு, இவ்விடயம் குறித்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் தீர்க்கப்படாத நிலை தொடர்கின்றது.

ஒரே எல்லையில் அமைந்துள்ள ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் காணி மற்றும் புதிய கட்டடத்தை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் ஆக்கிரமித்துக்கொள்ளும் மறைமுகமான திட்டம் நடைபெற்று வருவதாக பாடசாலை நிர்வாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தினரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தீர்வின்றி இழுபறி நிலையில் தொடரும் இப்பிரச்சினை குறித்து ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் கடந்த 6 மாதங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற சேவையினூடாக அறிவித்துள்ளதோடு, முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் தலைமைகளைச் சந்தித்து உரிய ஆவணங்களுடன் விடயத்தை எத்திவைத்தும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலை தொடர்வதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.ஏ.எம்.சலீம் தெரிவித்தார்.

பாடசாலைக் காணி மற்றும் கட்டடத்துடன் தொடர்புடைய ஆவணங்களுடன் முஸ்லிம் அமைச்சர்களான றவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணன், விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரிடையே இவ்விடயம் எத்திவைக்கப்பட்டுள்ளது.

அயலில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பாடசாலை நிர்வாகம் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் இதற்கான தீர்வைப் பெற்றுத் தரமுடியாத நிலை தொடர்வதாகவும், முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஊர் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உலக வங்கியால் கல்வித் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதிக்கு என்ன நடந்தது? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் சேவைக்கு ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆவணங்களை மாத்தளை மாவட்ட செயலகம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அதற்கு ஜனாதிபதி சேவையில் இருந்து அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

1250 முஸ்லிம், தமிழ் மாணவ மாணவிகள் இடப்பற்றாக்குறையுடன் கல்வி நடவடிக்கையைத் தொடரும் இப்பாடசாலையின் கட்டட பிரச்சினையை தீர்த்துத் தருமாறு பொறுப்புவாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(ஆதில் அலி சப்ரி – உக்குவளை ஜலீல்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...