ரணில் - மைத்திரி அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த மாதத்திலிருந்து நாடு முழுவதிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று பகல் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் முதலாவது போராட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்படும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக அனைத்து தீர்மானங்களையும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனே மேற்கொள்கின்றார்.

அவர் தான் இந்த நாட்டின் முதலமைச்சராக இருக்கின்றார். 2014ஆம் ஆண்டில் நல்லாட்சியிடம் அரசை வழங்கும்வரை மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிவருமானம் 1 ரில்லியன் ரூபாவாகும்.

ஆனால் 2018ஆம் ஆண்டு டிசம்பர் ஆகும்போது 2 ரில்லியன் ரூபாவாக அதனை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

எனவே ஒன்றிணைந்த எதிர்கட்சி என்றவகையில் மக்கள் மீது குவிக்கப்படுகின்ற வரிச்சுமைக்கு எதிராகவும், பொருட்களின் விலைகள் அதிகரிப்பிற்கு எதிராகவும் அடுத்த மாதத்திலிருந்து ஸ்ரீலங்கா முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம்.

அதன் முதற்படியாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ஸ்ரீலங்கா முழுவதிலும் போராட்டங்களை நடத்தி இந்த வருடம் டிசம்பருக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் - மைத்திரி அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் ரணில் - மைத்திரி  அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் Reviewed by NEWS on May 23, 2018 Rating: 5