தமிழர்களின் நிலமீட்பு ’போராட்டத்துக்கு ஆதரவு’ - ஏ.எல் தவம் களத்திற்கும் விஜயம்நடராஜன் ஹரன், ரீ.கே.றஹ்மத்துல்லா
தமிழ் மக்களின் நிலமீட்புப் போராட்டத்தை வரவேற்பதாகவும், இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார தொழில்வாய்ப்புச் செயலாளரும் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான ஏ.எல் தவம் தெரிவித்தார்.
இது தொடர்பில், இன்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 30 ஆண்டுகால யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், முன்னர் தமது உரிமைக்காகப் போராடிய தமிழ் மக்கள், தமது பூர்வீக நிலங்களுக்காக இன்று போராடுவது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்களுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடத்தில் தம்மை மீளக் குடியமர்த்துமாறு, கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், 15ஆவது நாளாகவும்இன்று (28) தொடந்தமையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
"1979ஆம் ஆண்டு, காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மாவட்ட செயலாளரால் வழங்கப்பட்டதோடு, விவசாயச் செய்கைக்கான அனுமதிப்பத்திரங்கள் என்பனவும் ஆவணமாகவுள்ளன எனத் தெரிவிக்கும் மக்கள், தங்களது நிலத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு, நிரந்தரமான தீர்வு கிடைக்கும்வரை போராடவுள்ளதாகவும், சாதகமான பதிலைத் தமக்கு வழங்க வேண்டுமெனவும் கோருகின்றனர்" என்று அவர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி, இன, மத, மொழி கடந்து சரியான தீர்வை வழங்கவேண்டும் என்று கோரிய அவர், எனினும் அம்பாறை மாவட்டத்தில் விவசாயக் காணிகளும் மக்கள் வாழுகின்ற, வாழ்ந்து வந்த குடியிருப்புக் காணிகளும், வன இலாகாவின் கீழ் அடையாளப்படுத்தப்படுகின்றன எனவும், இது கவலைதரும் விடயமே என்றும், இதற்காக ஜனாதிபதி சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை, இப்போராட்டங்களுக்கான தமது ஆதரவு தொடரும் என்று மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...