கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு கல்முனையன்ஸ் போரம் விஜயம்.

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (Eastern Cancer Care Hospice) விஷேட அழைப்பின் பேரில் ஏறாவூரில் அமைந்துள்ள அவர்களின் பராமரிப்பு நிலையத்திற்கு கடந்த  வெள்ளிக்கிழமை (28) அன்று கல்முனையன்ஸ் போரத்தின்  குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

கல்முனை பிராந்தியத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வுகள், புற்றுநோயாளர்களுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை முன்னெடுப்பதற்கான   அழைப்பை ECCH நிறுவனம் கல்முனையன்ஸ் போரத்திடம்
உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தது. அதனடிப்படையிலேயே குறித்த விஜயம் இடம்பெற்றது. 

இவ்விஜயத்தின் போது ECCH நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம், முடிவுறும் தருவாயில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தினது கட்டுமானங்கள், பராமரிப்பு நிலையம் இயக்கத்திற்கு வந்ததன் பிற்பாடுள்ள நடைமுறைச்சவால்கள் மற்றும் அதிகரித்துவரும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்குதல் போன்றவை குறித்து ECCH நிறுவனத்தின் பிரதம ஆலோசகர் புற்றுநோய் வைத்திய நிபுணர் முஹம்மது இக்பால் அவர்களால் கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர்களிடம் விரிவாக விளக்கப்பட்டது. மேலும் ஒக்டோபர் மாதம் சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் கல்முனை பிராந்தியத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்துவது தொடர்பாகவும் இரு நிறுவனங்களுக்கிடையிலும் இணக்கம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் முஹம்மது ஹனீபா அவர்களும் ECCH நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...