ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சனத் ஜயசூரிய



ஸ்ரீலங்காவிற்கு 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பெற்றுத்தருவதற்கு முக்கிய பங்காற்றியவரும் நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமை மற்றும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தமை. தாமதத்தை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் அரசியலுக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசாரணைகளை இரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்த விசாரணைகள் தொடர்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொதுமுகாமையாளர் அலெக்ஸ் மாஷல் தகவல் வெளியிட்டிருந்தார்.

கடந்த ஓராண்டாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கு தெளிவூட்டியிருந்தார்.எனினும் விசாரணை செய்யப்படும் நபர்கள் குறித்த தகவல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு இரகசியமாக பேணியிருந்ததது.

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிலுள்ள முக்கிய நட்சத்திர வீரர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்த விசாரணைகளுக்குள் சிக்கியுள்ளதாக அப்போது தகவல் வெளியாகியிருந்த போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தேர்வுக் குழுவின் தலைவராக செயற்பட்ட நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளது.2013 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2015 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடர் வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவின் தலைவராக அவர் செயற்பட்டிருந்தார்.

எனினும் தெரிவுக்குழு செயற்றிறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றதை அடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அவர் இராஜினாமா செய்திருந்தார்.இந்த நிலையில் தலைமை தெரிவுக்குழு உறுப்பினராக பதவி வகித்த காலப்பகுதியில் சனத் ஜயசூரிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு பயன்படுத்திவரும் கையடக்க தொலைபேசியை வழங்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு சனத் ஜயசூரியவை கோரியிருந்தது.இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் அளிப்பதற்கு சனத் ஜயசூரியவிற்கு இன்று முதல் 14 நாட்கள் கால அவகாசத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சனத் ஜயசூரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சனத் ஜயசூரிய Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5