ஜனாதிபதியோ பிரதமரோ என்னை பதவி விலகக் கோரவில்லை. எனினும், அவர்களது எச்சரிக்கைகளை நான் புரிந்துகொண்டுள்ளேன். பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் என்மீது நம்பிக்கையில்லையெனில் நான் அப்பதவியில் நீடிப்பது அர்த்தமற்றது. எனவே ஓய்வு பெறுவது குறித்து ஆராய்கின்றேன். எனினும் இன்றுவரை (நேற்று) இறுதித் திகதி குறித்து தீர்மானிக்கவில்லை என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் ஓய்வுபெறப் போவதாகவும், ஜனாதிபதி அவரை ஓய்வுபெறுமாறு வற்புறுத்தியதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "எல்லோரினதும் தேவை நான் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகிச்செல்ல வேண்டுமென்பதானால், நான் இப்பதவியிலிருந்து செல்வதே முறைமையாக அமையும். 33 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருக்கின்றேன். மிக வெளிப்படையாக நான் சேவையாற்றியுள்ளேன். இவ்வாறான வெளிப்படை சேவைக்கு கல்லடி மட்டுமே தொடர்ந்து கிடைக்குமானால் இதற்கு மேல் இருப்பதில் அர்த்தமில்லை. என்னை நீக்க முடியுமா முடியாதா என்றெல்லாம் ஆராய்கின்றார்கள். நானாக சென்றால் அப்பிரச்சினை ஏற்படாதல்லவா? எனவே, நான் பொலிஸில் கடமையாற்றியது போதுமென்று நினைக்கின்றேன். அதனால் ஓய்வுபெறுவது குறித்து சிந்திக்கின்றேன். இன்னும் இறுதித் திகதியை முடிவு செய்யவில்லை" என்றார்.
இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர கடந்த 2016 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பு பேரவை, மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் பெயரை பரிசீலித்து அதிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ்மா அதிபராகத் தெரிவுசெய்தது.
இந்நிலையிலேயே சுயாதீனமாக தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவிவிலக்க பல்வேறு தரப்புகளும் அண்மைக்காலமாக குரல் கொடுத்து வருகின்றன. இந் நிலையிலேயே தற்போது பொலிஸ்மா அதிபர் தானே ஓய்வுபெறுவது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
