அரசை பகைத்துக் கொண்டு எமது நோக்கங்களை அடைய முடியாது - சம்பந்தன்தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே கடந்த அரசாங்கத்தினை துரத்தி நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற ஒத்துழைத்தோம்.எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதிய பொதுச்சந்தை கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கையில்:-
ஆட்சிமாற்றத்தினூடாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிய ஜனாதிபதியை பதவியில் இருந்து விரட்டி வேறுவிதமாக சிந்திக்கும் அரசாங்கத்தினை உருவாக்கினோம். ஆனால் இந்த ஜனாதிபதியிடமும் பல குறைபாடுகள் உள்ளன.
சில முக்கியமான விடயங்களுக்காகவே நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததன் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வினை காணவே கடந்த அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வர உதவினோம்.
இந்த அரசாங்கத்தினை பகைத்துக் கொண்டு எமது நோக்கத்தை நிறைவேற்றமுடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது. ஆனால் அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம்.
எமது மக்களின் இறைமை மதிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தாங்கள் வாழும் பகுதிகள் அவர்களிடமே வழங்கப்பட வேண்டும்.
நாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்றார்
அரசை பகைத்துக் கொண்டு எமது நோக்கங்களை அடைய முடியாது - சம்பந்தன் அரசை பகைத்துக் கொண்டு எமது நோக்கங்களை அடைய முடியாது - சம்பந்தன் Reviewed by NEWS on October 18, 2018 Rating: 5