மட்டக்களப்பில் வீதியில் நின்ற பொலிஸார் சுட்டுக்கொலை - படங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (30)அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அம்பாறை பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த கணேஸ் டினேஸ்(வயது-28) பிரசன்ன(முழு விபரமும் கிடைக்கவில்லை) ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே உயிரிழந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் உத்தரவிட்டார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.


மட்டக்களப்பில் வீதியில் நின்ற பொலிஸார் சுட்டுக்கொலை - படங்கள் மட்டக்களப்பில் வீதியில் நின்ற பொலிஸார் சுட்டுக்கொலை - படங்கள் Reviewed by NEWS on November 30, 2018 Rating: 5