மகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி!

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின் முயற்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட முடியாது என்றும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாக பணியாற்ற முடியாது என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிற்பகல் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை முறையீடு செய்யவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ச நேற்றுமாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும், இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டவுடன் அதனை, உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீது, இன்று தொடக்கம் மூன்று நாட்கள், உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்களைக் கொண்ட அமர்வு விசாரிக்கவுள்ளது.

இப்போது உச்சநீதிமன்றத்தில் 9 நீதியரசர்களே பணியில் உள்ளனர். மேலும் இரு நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை பரிந்துரைத்தும், சிறிலங்கா அதிபர் இன்னமும் அவர்களுக்கு நியமனங்களை வழங்கவில்லை. இதனால்,பணியில் இருக்கும், 9 நீதியரசர்களில் 7 பேர் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனு மீதான விசாரணையில் பங்கேற்கவுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தரப்பு இன்று காலை தாக்கல் செய்யவுள்ள, மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு, குறைந்தது மூன்று நீதியரசர்களின் அமர்வு அவசியம். ஆனால், நீதியரசர்கள் ஈவா வணிகசுந்தரவும், தெஹிதெனியவும் மாத்திரமே இன்று தொடக்கம், மூன்று நாட்களுக்கு ஏனைய மனுக்களை விசாரிக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இதனால், மகிந்த ராஜபக்சவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு, மேலும் ஒரு நீதியரசர் தேவைப்படுவார். அடுத்த மூன்று நாட்களும் அது சாத்தியமில்லை என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடினாலும், உடனடியாக தடை உத்தரவைப் பெற முடியாத நிலை மகிந்த தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை 3 நீதியரசர்களே முதலில் விசாரித்தனர். 7 பேர் கொண்ட நீதியரசர்களே இதனை விசாரிக்க வேண்டும் என்று மகிந்த- மைத்திரி தரப்புகளோ கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி! மகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி! Reviewed by Ceylon Muslim on December 04, 2018 Rating: 5