எதிர்க்கட்சி  பதவி  வகித்துக் கொண்டு  ஐக்கிய தேசிய  கட்சியின்  பங்காளியாக செயற்படும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களால் வெறுக்கப்பட்ட  ஒரு  கட்சியாக உள்ளது. ஆகவே  இனி எதிர்கட்சி  தலைவர் பதவியினை வகிக்க  இரா.  சம்பந்தனுக்கு எவ்வித தகுதியும்  கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
எதிர்  கட்சி  தலைவர் இரா. சம்பந்தன்   வடக்கு கிழக்கு அபிவிருத்தி  தொடர்பில்  மாத்திரமே  இதுவரையில்   கருத்து  வெளியிட்டுள்ளார். தெற்கில்  உள்ள பிரச்சினைகள்  தொடர்பில் எதிர்  கட்சி தலைவர் என்ற வகையில் இதுவரையில் இவர்  குரல் எழுப்பியுள்ளாரா,  பெரும்பான்மை மக்களுக்கு தேவையற்ற ஒரு  எதிர்  கட்சி  தலைவர்  பதவியை வகிப்பதால் எவ்வித  பயனும் ஏற்படாது எனவும்  தெரிவித்தார்.
தேசிய கலாசார  மத்திய நிலையத்தில்  இன்று புதன் கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்  தேசிய கூட்டமைப்பினர்  ஒரு தரப்பினருக்காகவே செயற்பட்டனர். ஆனால்  இவர்களால் கடந்த  நான்கு வருட   காலமாக தமிழ் மக்களின்  பிரச்சினைகளை கூட  தீர்க்க முடியவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய  கட்சியின்  பிரச்சினைகளை மாத்திரம் முழுமையாக தீர்த்து வைத்துள்ளனர். ஆகவே  மக்களால் தற்போது  வெறுக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய தேசிய  கட்சியினருக்கு ஆதரவு  வழங்கும்  தமிழ் தேசிய  கூட்டமைப்பு  எதிர்  கட்சி  பதவியினை  தொடர்ந்து   வகித்தால்  பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.


