Jan 16, 2019

அமைச்சர் பதவி என்ற ' பரிசு' !கடந்த வருட இறுதியில் மூண்ட அரசியல் நெருக்கடியில் இருந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்று  அமைச்சர் பதவி தங்களுக்கு தரப்படவில்லை என்பதால் குமுறிக்கொண்டிருக்கின்ற தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிக்கமுடியாமல் இருப்பது ஆகும். 


 அரசியல் நெருக்கடியின்போது மறுதரப்புக்கு தாவாமல்  விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்றதற்காக தங்களை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர்களில் பலர் பகிரங்கமாகவே கேட்டிருக்கிறார்கள். வெகுவிரைவில் பதவி தரப்படாவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுப்பதற்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்கவில்லை.தங்களுக்கு நிச்சயமாக தரப்படவேண்டிய ஒரு 'பரிசாக ' பதவிகளை அவர்கள் நினைக்கிறார்கள்.

கடந்தவாரம் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களாக இருவரும் பிரதியமைச்சராக ஒருவரும் பதவியேற்றுக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதையடுத்து  அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதற்குப் பின்னர் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் மூவர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.

 தற்போது தேசிய அரசாங்கம் கிடையாது. பதவியில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமே. அதனால், அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவேண்டியிருக்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு தங்களுக்கு பவி தரப்படவில்லை  என்பதால் எந்தவிதமான நயநாகரிகமுமின்றி பகிரங்கமாகவே தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்டிய அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிப்பதற்கான பிரதமரின் நடவடிக்கையாகவே கடந்தவாரத்தைய அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் நியமனத்தை பார்க்கவேண்டியிருக்கிறது. பின்வரிசை பாராளுமன்ற  உறுப்பினர்களும் கூட பிரதமரின் இக்கட்டான நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளைக் கேட்கிறார்கள்.

அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்தான் 30 க்கு மேல் அதிகரிக்கமுடியாது. அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களாக பலரை நியமிக்கமுடியும் என்றும் அவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அத்தகைய அமைச்சர்களின் எண்ணிக்கையையும் தான் விரும்புகிற மாதிரி நியமிக்க பிரதமரால் முடியாது.

அது கட்டுப்படியாகாது. அத்துடன் அரசாங்கத்துடன் மோதல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்கிரமசிங்கவின் எல்லா விருப்பங்களுக்கும் இடம்கொடுக்கவும் முன்வரமாட்டார் என்பது இன்னொரு பிரச்சினை.
அமைச்சரவை உறுப்பினர்கள் 30 பேரில் ஜனாதிபதியையும் பிரதமரையும் 19 ஆவது திருத்தம் உள்ளடக்கவில்லை என்று சுட்டிக்காட்டி  மேலும் இரு அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோதிலும் அது சாத்தியமாகவில்லை.

அமைச்சர் பதவிகளைத் தராவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கப்போவதாக மக்கள் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் வெருட்டுவதும் மக்களுக்குச் சேவைசெய்யவேண்டுமானால் அமைச்சர் பதவி தேவை என்று வாதம் செய்வதும் இன்றைய அரசியல் கலாசாரச் சீரழிவின் ' உச்சங்களில் ' ஒன்று.
அமைச்சர் பதவிகளைக் கேட்டு தொல்லை தருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பலருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ரணசிங்க பிரேமாசவே தனது ஆட்சியில் இராஜாங்க அமைச்சர் பதவிகளை அறிமுகம் செய்தார். அதற்கு முதல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்று சுமார் 100 பேர் அமைச்சர்களாக பதவிவகித்தனர். அப்போது இராஜாங்க அமைச்சராக கலாநிதி ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் மாத்திரமே இருந்தார். ஆனால், பிரேமதாசவினால் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற இராஜாங்க அமைச்சராகவோ அல்லது இன்று நியமிக்கப்படுகின்ற இராஜாங்க அமைச்சர்களைப் போன்ற இராஜாங்க அமைச்சராக கலாநிதி அல்விஸ் இருக்கவில்லை. தகவல் , ஊடகத்துறை அமைச்சு பொறுப்பு அவர்வசம் இருந்தது. அத்துடன் அவர் அமைச்சரவை உறுப்பினர். 1965 -- 70 டட்லி.சேனநாயக்க அரசாங்கத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தன இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தார். இன்றைய இராஜாங்க அமைச்சர்களைப் போலன்றி பல முக்கிய  அமைச்சுப்பொறுப்புக்களைத் தன்வசம் கொண்டிருந்த ஜெயவர்தன பிரதமருக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமதாச அறிமுகம் செய்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு அமைச்சரவை அந்தஸ்து கிடையாது. அப்போது கூட அந்த நியமனங்களின் சட்டபூர்வத்தகுதி குறித்து பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சேபித்து கேள்வியெழுப்பியது.
முன்னரெல்லாம் அமைச்சர்கள் என்று  இருவகைப்பட்டவர்களே இருந்தார்கள். அமைச்சரவை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களுமே. பிரேமதாசவின இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்து பாராளுமன்றத்தில் கிளப்பப்பட்ட கேள்விக்கு உகந்தமுறையில் பதிலளித்து அதை நியாயப்படுத்த முடியாமல் ஏனைய அமைச்சர்கள் தடுமாறியபோது சிறந்த சட்டநிபுணரான அமைச்சர் லலித் அத்துலத் முதலி எழுந்து " அமைச்சர்கள் , பிரதியமைச்சர்களுக்குப் புறம்பாக ' மற்ற ' அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு இடமளிக்கிறது.இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் அந்த ' மற்ற ' என்பதற்குள் வருகிறது" என்று பதிலளித்து சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பது நினைவிருக்கிறது.அதற்குப் பிறகு அது குறித்து எவரும் கேள்வியெழுப்பவில்லை. பிரேமதாசவின் ஆட்சியில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று 100 க்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள்.

இப்போது யார் இந்த அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்று பார்ப்போம். கடந்த மாதம்வரை அதைச் சுலபமாகச் சொல்லிவிடலாம். அதாவது அமைச்சரவை உறுப்பினர்களாக இல்லாதபடியால் பிரதியமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களுமே அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள்.இப்போது  அந்த அமைச்சர்களுக்குப் புறம்பாக  அமைச்சரவை அந்தஸ்து இல்லாத வேறு அமைச்சர்களும் இருக்கிறார்கள்.கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய வகையினரான அமைச்சரவை அந்தஸ்து இல்லாத மூன்று அமைச்சர்களும்  அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நிகராக தங்களுக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்கள்.அவர்களால் அமைச்சரவைக்கூட்டங்களில் பங்கேற்கமுடியாது என்பதே ஒரே வித்தியாசம்.

அத்துடன் அவர்கள் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஊடாக அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்கள்.
இவர்களது நியமனங்களை 19 வது திருத்தத்தை மீறுவதற்கு அரசாங்ம் கையாண்டிருக்கின்ற ஒரு தந்திரோபாயமோ என்று சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைத்தான் 30 க்கு மேல் அதிகரிக்க முடியாது ; அமைச்சரவை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போன்ற பொறுப்புகளுடனும் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுடன் எந்த எண்ணிக்கையிலும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களை நியமிக்கமுடியுமா?
அமைச்சர் பதவி இல்லாமல் பாராளுமன்ற உறுப்பிர்களினால் மக்களுக்கு முறையாகச் சேவை செய்யமுடியாது என்று இவர்கள் வாதிடுவது முற்றிலும் அபத்தமானது ; நகைப்புக்கிடமானது.தாங்கள் இதுவரை காலமும் தாங்கள் மக்களுக்குச் சேவைசெய்யவில்லை என்பதை இவர்கள் ஒத்துக்ககொள்கின்றார்கள் என்றுதானே அந்த வாதத்தை அர்த்தப்படுத்தவேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதைப் பார்த்தால் சபாநாயகர் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்யமுடியுமோ?

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network