Jan 7, 2019

புல்மோட்டை : முஸ்லிம்களின் காணிகள் படையினரால் அத்துமீறல்

திருகோணலை மாவட்டத்தின், புல்மோட்டை பிரதேசத்தில் காணப்படும் ஜின்னாபுரம், பட்டிக்குடா, கரையாவெளி, முகத்துவாரம் போன்ற பகுதிகளிலுள்ள தங்களுக்குச் சொந்தமான காணிகளை அப்பிரதேச மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் சுத்தம் செய்ய முற்படுகின்றபோது கடற்படையினரால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுவதும், தங்களது காணிகளுக்கான எல்லை வேலிகள் மற்றும் தங்குவதற்கு கட்டப்படும் கொட்டில்களை அகற்றி கடற்படை முகாமிற்குள் எடுத்து செல்வது போன்ற நடவடிக்கை தொடர்ந்த வன்னமுள்ளது.


இக்காணிகளை அண்மித்து காணப்படுகின்ற, மண்கிண்டி மலை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிலிருக்கும் கடற்படையினரே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்ட வன்னம் உள்ளனர். இந்த வகையில் நேற்று சனிக்கிழமை புல்மோட்டை ஜின்னாபுரம் கூமாங்குள பிளவு பகுதியில் அப்துல் காதர் ஜெஸ்மீர் என்பவரால் அவருக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் பரப்புள்ள குடியிருப்பு மற்றும் தோட்ட காணிக்குள் படையினர் அத்துமீறி சென்று குறித்த நபரால் வேலியிடப்பட்டிருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட வேலிக்கான தூண்கள், கொட்டிலில் அமைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் மற்றும் கம்பி போன்றவற்றை கடற்படையினர் அதிகாலைவேளை சென்று அவை அனைத்தையும் அகற்றி கடற்படை முகாமிற்குள் எடுத்து சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரான அப்துல் காதர் ஜெஸ்மீர் என்பவரால் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு நடைபெற்ற சம்பவத்தினை புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

இது விடயமாக கவனம் செலுத்திய அரசாங்க அதிபர் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு உடனடியாக விடயங்களை கவனத்தில் கொள்ளும்படி பணிப்புரை விடுத்தார்.

இது விடயமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதிக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை தெளிவுபடுத்தியதுடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியுடனுன் பேசியதை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை நடாத்தியதுடன் கடற்படையினரால் எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்கும் பொருட்டு கடற்படையினரால் உரியவரின் பொருட்களையும் எடுத்து செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போன்றோரிடம் கடற்படையினர் இவ்வாறு பொதுமக்களின் காணிகளுக்குள் அத்துமீறி செயற்பட அதிகாரமில்லை என்று சுட்டிக்கட்டினார்.

ஏற்கனவே மண்கிண்டி மலை கடற்படை முகாமிற்கு 50 ஏக்கர் காணி பிரதேச செயலகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக சுமார் 97 ஏக்கர் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் படையினரால் அத்துமீறி வேலியிடப்பட்ட நிலையில் அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலாளரால் அரசாங்க அதிபரூடாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிகமாக பொதுமக்களின் காணிகள் பிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியால் கடந்த வருடம் டிசம்பர் 31 ம் திகதி முதல் படையினர் தங்களிடமுள்ள மேலதிக காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் நிலையில் குறித்த படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.

பிரதேச செயலாளரிடம் மேலதிகமாக 93 ஏக்கர் காணிகளை புல்மோட்டை கடற்படை முகாமிற்கு தரும்படி கடற்படையினரால் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரால் பிரதேச மக்களில் அதிகமானோர் காணிகளற்ற நிலையில் இருக்கும்போது தர முடியாத நிலைமை உள்ளதாகவும் படையினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறித்த காணியை அண்டிய பகுதியில் வன பரிபாலன திணைக்களத்தின் ஜி.பி.எஸ் யினூடாக தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய நிலையிலும் இது விடயமாக பேசப்பட்டு வருகின்றது.

ஏலவே முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்களின் காலத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் தலைமையில் வழங்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட காணி அனுமதி பத்திரத்தில் குறித்த பட்டிக்குடா, ஜின்னா புறம் பகுதிகளுக்கும் காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிமக்ளுக்கு வெறுமனே காடுகளுக்கு மட்டுமே காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை ஆராயும் முகமாக விசேட குழுவொன்று இப்பிரதேசத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த நிலையில் பிரதேச செயலகத்தில் அனுமதி பத்திரத்தின் (லெட்ஜ்ர்) அடிக்கட்டைகளை ஜனாதிபதி காரியாலயத்திற்கு கொண்டு சென்ற நிலைமையில் திட்டமிட்டு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்ற விடாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும். இருந்தும், தொடர்ந்தும் எமது பிரதேச மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கை செய்து வருகின்றனர், எதுவாயினும் எமது பிரதேச மக்களின் காணிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவிடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்னும் ஒருசில தினங்களில் விசேட கூட்டமொன்றை பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network