‘இராஜினாமா குறித்து பிரதேசவாதம் பேசக் கூடாது’தனது இராஜினாமா குறித்து யாரும் பிரதேச வாதம் பேசக் கூடாதென, தேசிய காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பல தியாகங்களுக்கு மத்தில், எதிர்பார்ப்புகளுமின்றி வளர்த்த தேசிய காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும், சந்தேகத்துக்கிடமான வகையில் சில விடயங்களைச் சொல்லியதால் அக்கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சி ஆதரவாளர்கள் விலகி, உதுமாலெப்பைக்கு ஆதரவு தெரிவுக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் நேற்று (17) மாலை நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியதுடன், தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னோடு இணைந்து அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துச் செயற்பட்ட சட்டத்தரணி எம்.பஹீஜ், தன்னோடு இணைந்து பயணிப்பதற்கு முன்வந்துள்ளார் என்றார்.
தாங்கள் ஒரு போதும் பட்டம் பதவிக்கோ, பணத்துக்கோ, சந்தர்ப்பத்துக்காக மாறவில்லை என்பதை கடந்த கால அரசியலில் நிரூபித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை, மூதூர், கிண்ணியா, பொத்துவில், அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதையிட்டு, தனது பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...