வடக்கின் அபிவிருத்தி தடைக்கு, பிரதமரே காரணம் : ஜே.வி.பி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே, வடக்கிற்கான அபிவிருத்திகள் தடைப்பட்டதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகின்றது.

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது, வடக்கு அபிவிருத்தி அமைச்சினைப் பொறுப்பேற்றுள்ளார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற கடந்த மூன்றரை வருடங்களில், வடக்கின் அபிவிருத்தி குறித்து அக்கறை கொள்ளவில்லை. யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அதனைத் தீர்க்கக்கூடிய சிறந்த நபரை அவர் அமைச்சராக நியமிக்கவில்லை.

அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஊழல், மோசடி என்பவற்றினால் அது கைகூடாமல் போனது.

அங்கு நிலத்திற்காக மக்கள் 700 நாட்களைக் கடந்து இன்றும் போராடுகின்றனர். கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வரை சென்றுள்ளது.

பாதுகாப்புப் படையினர் வசமிருக்கும் தமது குடியிருப்புக் காணிகளை விடுவிக்கக் கோரி, 700 நாட்களுக்கு மேலாக பெண்கள் வீதியில் அமர்ந்து அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல போலியான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த நாடும், நாட்டு மக்களும் ஏமாற்றப்படுகின்றனர்.இந்த நிலையில், கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைகளை பிரதமர் கண்டும் காணாமலும் இருக்கிறாரா என்று கேட்கிறேன்.

அல்லது அவர் அந்த மக்களைப் புறக்கணிக்கிறாரா? பலமுறை வடக்கிற்குச் சென்ற பிரதமர் அந்த மக்களைச் சந்திக்காதது ஏன்? அப்படி முடியவில்லை என்றால் எதிர்வரும் பயணத்தின்போது அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுங்கள்.

இவ்வாறு போராடும் மக்கள் அரசாங்கத்தின் இடத்தினைக் கேட்கவில்லை. யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றிய அவர்களின் நிலங்களையே கேட்கின்றனர். தேவையற்ற இடங்களில் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்.

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் மஹிந்த தரப்பினர், சாலா ஆயுதக் களஞ்சியம் வெடிப்பிற்குள்ளான போது, இராணுவத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்று இந்த நாடு நன்கு அறியும்.

காணி விடுவிப்பு குறித்து, ஐ.நா.வின் பாராட்டு கிடைத்து பிரயோசனம் இல்லை. மக்கள் இராணுத்தினரை ஏசுகின்றனர். இந்த காணிகளை கையகப்படுத்தியிருப்பதால், இராணுவத்தினருக்கும் பிரச்சினை இருக்கிறது” என்றார்.
வடக்கின் அபிவிருத்தி தடைக்கு, பிரதமரே காரணம் : ஜே.வி.பி வடக்கின் அபிவிருத்தி தடைக்கு, பிரதமரே காரணம் : ஜே.வி.பி Reviewed by NEWS on March 14, 2019 Rating: 5