தேவாலயத்தைப் படம் பிடித்த இரு முஸ்லிம் சிறுவர்கள் ஆஜர்

NEWS
1 minute read
ஹட்டன் பொஸ்கோ கிறிஸ்தவ தேவாலயத்தைப் Photo பிடித்த இருவரும், தமது பெற்றோருடன் பொலிஸ் நிலையத்தில் இன்று (7) ஆஜராகியதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 16, 18 வயதுடைய சிறுவர்களே, இவ்வாறு பொலிஸில் ஆஜராகியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, மேற்படி தேவாலயத்துக்கு வந்த இருவர், தேவாலயத்தைச் சுற்றிப்பார்த்ததுடன், படம்பிடிக்க முற்பட்டனர் என்று, தேவாலயத்தின் பங்குத்தந்தை செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக,தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியின் உதவியுடன், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அன்றையத் தினம் தாமே தேவாலயத்தைப் பார்வையிட்டதாகக் கூறி சீசிடீவி காணொளியில் இருந்த இருவரும், தமது பெற்றோர், உறவினர்கள் ஏழு பேருடன், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர்.

கொழும்பு பிரதான பள்ளிவாயலில் இருந்து, ஜமாத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பள்ளிவாயல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவ்வாறே தாமும் ஹட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், பயங்கரவாதிகளுக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லையென்றும் கூறியுள்ளனர்.

ஹட்டனுக்கு வருகைத்தந்தது இதுவே முதற்றடவை என்பதால், ஹட்டன் பிரதேசத்தைச் சுற்றிப்பார்த்ததாகவும் குறிப்பாக ஹட்டன் பிரதேசத்திலுள்ள மிகவும் பழைமைவாய்ந்த தேவாலயம் என்பதால், பொஸ்கே தேவாலயத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் பூஜைகளை ஆரம்பிப்பதற்காக, தேவாலயத்தின் மணி ஒலித்ததால், அவ்விடத்திலிருந்து வந்துவிட்டதாகவும் அவ்விளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Top