நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சி ஜனாதிபதி அதிரடி..வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45,585 பேருக்கான நியமனக் கடிதங்கள் - அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளன.
நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக நேரில் அறிவிப்பதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை நிலையம் அல்லது நகர கஷ்டப் பிரதேச நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒரு வருடகால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதுடன், முதல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிரதேசங்களில் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.
இரண்டாம் குழுவினர் குறித்த சேவை நிலையத்தில் தமது கடமை தொடர்பாகவும் சேவை நிலையம் தொடர்பாகவும் இரண்டு மாதகாலம் ஆய்வு செய்து அந்நிலையத்தை முன்னேற்றுவதற்கான செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும்.
முதல் குழுவின் தலைமைத்துவப் பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்கள் தமது சேவை நிலையங்களுடன் இணைக்கப்படுவதுடன், இரண்டு மாதகாலம் சேவை நிலையம் மற்றும் வழங்கப்பட்ட கடமைகள் தொடர்பாக ஆய்வு செய்து செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும்.
அதே சமயத்தில் - ஏற்கெனவே செயற்திட்ட அறிக்கையை நிறைவு செய்துவிட்டிருக்கும் இரண்டாம் குழுவினர் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சியினை பெறுவர்.
இவ் இரண்டு குழுக்களும் பின்னர் குறித்த சேவையில் தொழில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர்.
2021 மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் அனைத்து பயிலுநர்களுக்கும் குறித்த சேவை நிலையத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
நியமனம் பெறும் அனைத்து பட்டதாரி பயிலுநர்களும் தமது சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி அல்லது கிராமிய அபிவிருத்தி வங்கி கிளையொன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டியதுடன், அது பற்றிய விபரத்தைப் பிரதேச செயலாளருக்கு வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில் - பயிற்சி காலத்தில் மாதாந்தம் ரூபா 20,000 கொடுப்பணவு அக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
பயிற்சி காலத்தின் முதல் இரண்டு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் செயற்திட்ட அறிக்கைக்கேற்ப - கிராமிய மற்றும் குறைந்த வசதியுடைய குறித்த சேவை நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக 2020 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் - அனைத்துப் பயலுநர்களும் சேவை நிலையத்தில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அண்மித்த பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தமது சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சி ஜனாதிபதி அதிரடி.. நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சி ஜனாதிபதி அதிரடி.. Reviewed by ADMIN on March 04, 2020 Rating: 5