கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகி விடக் கூடாது - விசேட கட்டுரை



சிராஜ் மஷ்ஹுர்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முனைப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் அடுத்த வருடத்தின் ஆரம்பப் பகுதிகளில் இது இன்னும் கூர்மையடையும் என எதிர்பார்க்கலாம்.
பாராளுமன்றம், அரசியலமைப்பு பேரவையாக (Constitutional Assembly) இயங்குவது தெரிந்ததே. அத்தோடு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய இயக்குனர் குழுவொன்றையும் (Steering Committee) இந்த அரசியலமைப்பு சபை நியமித்துள்ளது.
இந்த இயக்குனர் குழுதான் சிக்கலான, சர்ச்சைக்குரிய விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் சபையாகவும் உள்ளது. இந்தக் குழுவில் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகிய இருவரும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இந்த இயக்குனர் குழுவில் பேசப்படும் விடயங்கள் குறித்து வெளியில் பேசுவதில்லை என, அதன் அங்கத்தவர்கள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்று உள்ளது. இதனால் இதன் அங்கத்தவர்கள் யாரும் வாய் திறக்கிறார்கள் இல்லை.
மிக உணர்ச்சிகரமான பிரச்சினைகளை அடக்கி வாசிப்பதற்கான அரசியல் தேவை இருப்பது ஒரு வகையில் நியாயம்தான். எனினும், இது வெளிப்படைத் தன்மைக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை அறிவதே பெரும் பாடாக இருக்கிறது.
இப்போது ஆறு உப குழுக்கள் தமது எழுத்து மூல அறிக்கைகளை, அரசியலமைப்பு சபைக்கு முன்வைத்துள்ளன. இந்த அறிக்கைகைகளில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள், பகிரங்க விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்குமாக திறந்து விடப்பட்டுள்ளன. இவை சட்ட நுணுக்கம் கொண்டவை என்பதால், சாதாரண பொதுமக்களை விடவும் துறை சார்ந்தோரின் கருத்துக்களும், அபிப்பிராயங்களுமே இவ்விடயத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே கால கட்டத்திலேயே, மேற்படி ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்பது இன்னொரு சிக்கல். இரு பெரிய விடயங்களை எவ்வாறு ஒரே வேளையில் கையாள்வது என்ற பிரச்சினைக்குப் பின்னே, திரை மறைவு நகர்வுகள் குறித்த சந்தேகங்கள் பலமாகத் தோன்ற ஆரம்பித்துள்ளன.
எது எப்படிப் போனாலும், புதிய அரசியமைப்பு தொடர்பான மிகவும் சீரியஸான விடயங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் கடப்பாடு, இயக்குனர் சபை அங்கத்தினர்களுக்கே இப்போது உள்ளது. அந்த வகையில், முஸ்லிம் சமூக பிரதிநிதிகளான இரு அமைச்சர்களினதும் பொறுப்பு மிகவும் கூடுதலானது. அதை அவர்கள் சரிவர நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகம் பொதுத் தளத்தில் வலுவாக உள்ளது.
துறை சார்ந்த புலமையாளர்களுடன் எவ்வளவு தூரத்திற்கு, தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளைகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெரியவில்லை. இது தொடர்பில் போதியளவு தகவல்களை அறிய முடியாமல் இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
'நாங்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லாம் சரி வரும்' என்ற அணுகுமுறை சரி வராது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகத்தான் இது அமையும். நால்லாட்சி அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மைக்கு, இந்த அணுகுமுறை பாரிய சவாலாகவே உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை, தமிழ் சமூகத்தை சமாளிக்க முனைவதிலேயே அதிக கவனம் கொண்டுள்ளது. இதற்கு ஜெனீவா கடப்பாடுகள் ஒரு காரணம். முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் விடயத்தில், அவர்களை எப்படியாவது கையாளலாம் என்ற அலட்சிய மனப்பான்மையே மேலோங்கியுள்ளது. இது தற்செயலான நகர்வு அல்ல. வேண்டுமென்றே பின்பற்றப்படும் தந்திரம்.
தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறையை இங்கு கவனிப்பது முக்கியம். அரசியலமைப்பு சபையிலும், இயக்குனர் சபையிலும் அங்கத்துவம் வகித்துக் கொண்டே, தங்களுக்கு எது தேவை என்பதை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, சமஷ்டி ஆட்சி முறை, மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை மேலும் அர்த்தபூர்வமாக அதிகரித்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல் போன்றவை அவர்களது பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
இந்தக் கோரிக்கைகளும், அரசியல் நிலைப்பாடுகளும் தென்னிலங்கையில் உணர்ச்சிகரமான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. ஆனால், அதற்காக தமிழரது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. ஏனெனில், இதற்காக அவர்கள் இழந்தவை மிக அதிகம்.
இந்த நிலைப்பாட்டிலே உறுதியாக இருந்து கொண்டுதான், புதிய அரசியலமைப்புக்கு எல்லா சமூகங்களினதும் இணக்கப்பாடு அவசியம் என்று இரா.சம்பந்தன் அடிக்கடி சொல்லி வருகிறார்.
தமது அடிப்படை நிலைப்பாட்டில் நின்று கொண்டுதான் சமரசம் பற்றிப் பேசலாம் எனும் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை அவர்கள் கொண்டுள்ளனர். இதில் தமிழ் சமூகத்திலுள்ள தீவிர தேசியவாதிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் இருப்பது வேறு கதை. இந்த எதிர் விமர்சனங்களை அவர்கள் கவனமாக 'கையாள்கிறார்கள்'.
பிரச்சினை என்னவென்றால், முஸ்லிம் சமூகத்தில் இது போன்ற கூர்மையான நடைமுறை அரசியல் தந்திரோபாயங்களோ, சாணக்கியமோ இல்லை. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ்தான் இவ்விடயத்தில் கூடுதல் பொறுப்புள்ள கட்சி. ஆனால், அவர்கள் எதைக் கேட்கிறார்கள், எதை விட்டுக் கொடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து பகிரங்கமாக எதுவும் பேசுகிறார்கள் இல்லை.
இந்த மௌனம் எதிர் விளைவுகளுக்கே வழியமைக்கும். இதில் கொஞ்சமும் சாணக்கியம் கிடையாது. கடைசியில் எல்லாம் நடந்த பிறகு கைவிரிக்கவே இது வழி வகுக்கும். 'எதிர்பார்த்த துயரம் இறுதியில் நிகழ்ந்தது' என்ற கதையாய் இது முடிந்து விடக் கூடாது. மு. கா. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேண்டிய காலகட்டத்தை வந்தடைந்துள்ளது.
இங்கு அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால், பொது நலனே அதிகம் வலியுறுத்தப்பட்ட வேண்டும். ஆதலால், முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே இந்தக் கட்டத்திலாவது திறந்த கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். குறைந்தபட்ச இணக்கப்பாடு, பொதுக் கோரிக்கைகள் மிகவும் இன்றியமையாதவை. எமது அறிவுஜீவிகளின் பங்களிப்புடன், இந்த இறுதி நேரத்திலும் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் முன்வர வேண்டும். அவர்களுக்குத்தான் பெரும் பொறுப்பு உள்ளது. அவ்வளவு இலகுவில் இதைத் தட்டிக் கழித்து விட முடியாது. அவர்களது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பாடா விட்டால், எதிர்காலத்தோடு விளையாடும் வரலாற்றுத் தவறுக்கு அவர்களே கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டி வரும்.
அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய அரசியல் சக்திகள், இதில் ஆரோக்கியமாக நகரும் என்ற நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. மாற்றுத் தெரிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆதலால், சிவில் சமூக சக்திகள்தான் இதில் முன்கையெடுக்க வேண்டும்.
குறிப்பு: இன்று 16.12.2016 இல் வெளியான மீள்பார்வையில் வெளிவந்துள்ள கட்டுரை இது.